எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்.. 9 பேர் பலி.! விளக்கம் கேட்கும் ஈரான்.!
பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.!
பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஈரான் தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் முகாம்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகினர். இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் வியாழக்கிழமை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி இதுகுறித்து கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் ஈரான் எல்லையில் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு பதில் கூற வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் ஈரான் விளக்கம் கேட்டுள்ளது.
பாகிஸ்தானில் பலூச் இன மக்கள் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ஈரானில் பலுசிஸ்தான் அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பிற்கு ஈரான் மறைமுக ஆதரவு அளிக்கிறது என்பது பரவலாக சர்வதேச அளவில் பரவி வரும் செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.