பிரதமர் பதவியில் இருந்து விலக இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தல்!
உக்ரைன் உள்ளிட்ட விவகாரங்களில் இம்ரான்கான் எடுத்துள்ள நிலைக்கு பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி.
இம்ரான்கானை பதவி விலக வலியுறுத்தல்:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற உள்ளதால், உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் இம்ரான்கானை அந்நாட்டு ராணுவம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், இதன்பின் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்தித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி:
உக்ரைன் உள்ளிட்ட விவகாரங்களில் இம்ரான்கான் எடுத்துள்ள நிலைக்கு பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைகளை குற்றசாட்டி இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம்:
அதனடிப்படையில், எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், பதவியில் இருந்து விலக இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு:
எனவே, விரைவில் பாகிஸ்தானில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு மாநாடு நிறைவுபெற்றவுடன், இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என ராணுவ தளபதி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
24 எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு:
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.