ட்ரம்ப் பேஸ்புக் அக்கவுண்ட் காலவரையின்றி முடக்க வாய்ப்பு- மார்க் ஜூக்கர்பெர்க்..!
அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் ஃபேஸ்புக் பக்கங்களில் டொனால்டு டிரம்ப் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் வகையில் இருந்து இருப்பதாக கூறி அவரது சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து டொனால்டு டிரம்ப் ட்விட்டர் 12 மணி நேரமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் 24 நேரம் முடக்கப்பட்டன.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி தடை செய்யவாய்ப்புள்ளது என பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக் கொள்கையை மீறியதற்காக டிரம்ப் பேஸ்புக் கணக்கு 24 மணி நேரம் தடை செய்தது. இந்த கால கட்டத்தில் ஜனாதிபதி எங்கள் சேவையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்கள் மிகப் பெரியவை என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே, அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் நாங்கள் வைத்திருக்கும் தடையை காலவரையின்றி அல்லது குறைந்தபட்சம் அடுத்த இரண்டு வாரங்களாவது நீட்டிக்கும் என்று ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணி நடைபெற்றது. ஆனால் டிரம்பின் ஆதரவாளர்கள் நேற்று தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் அங்கு பொருட்களை சேதப்படுத்தினர்.
இதனால், தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தப்பட்டது. டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பின்னர், தேர்தல் குழு அறிவிப்பின் படி, 306 வாக்குகளை பெற்று ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வரும் 20-ஆம் தேதி அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஏராளமான எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையை “வெட்கக்கேடானது” என்று பெருநகர காவல்துறைத் தலைவர் ராபர்ட் கான்டி கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உலகத் தலைவர்கள் இந்த வன்முறையை விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.