3-வது உலகப்போரில் அணு ஆயுதங்கள் – எச்சரித்த ரஷ்யா..!
மூன்றாம் உலகப் போர் நடந்தால் அது அணு ஆயுதங்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று கூறுகையில், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை சந்தித்து வரும் உக்ரைன் வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்கினால் அது பேராபத்தாக மாறும். வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மூன்றாம் உலகப் போர் நடந்தால் அது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்பட்டு மிகவும் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.
உக்ரைனின் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறிய நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை உத்தரவிட்டதிலிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான உக்ரேனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் மீதான தனது படையெடுப்பைத் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகு, ரஷ்யா படைகள் கணிசமான நகரத்தைக் கைப்பற்றியது.
இன்று தெற்கில் உள்ள கெர்சனைக் கைப்பற்றியது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதார தடையை விதித்து வருகிறது. ரஷ்ய படையெடுப்பின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 6,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர். தனது நாட்டை குண்டுகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் கைப்பற்ற முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சேதமடைந்த கட்டிடங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.