வடக்கு மாசிடோனியா: கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து..!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெட்டோவோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அந்த மருத்துவமனை முழுவதும் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் தப்பிக்க வழியின்றி அலற தொடங்கியுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து அறிவித்த பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி 1 மணி நேரம் கழித்து தீயை அணைத்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஸ்கோப்ஜேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்த காரணத்தினால் தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மேலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்டது எப்படி என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.