உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் வடகொரியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வடகொரிய பேரிடர் தடுப்பு துறைக்கான இயக்குனர் தகவல்…
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதில், சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில்,தற்போது, கிழக்காசிய நாடான தென் கொரியாவிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். ஆனால், அதன் அண்டை நாடான வட கொரியாவில், கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என, அந்த நாட்டு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், வட கொரியா நாட்டின் பேரிடர் தடுப்பு துறைக்கான இயக்குனர், பக் மியாங் சு கூறியதாவது, கொரோனா வைரஸ், சீனாவில் பரவத் துவங்கியதுமே, நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கி விட்டோம். மற்ற நாடுகளுடனான எல்லைகளுக்கு, ‘சீல்’ வைத்து விட்டோம். வெளிநாடுகளில் இருந்து, யாரும் வராதபடி, விமான, கப்பல் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கு சற்று முன்னதாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்தோம். இதன் காரணமாக, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.