வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயிருடன் உள்ளார்- தென் கொரியா உறுதி.!

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் , அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளார். இதனால் அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பல செய்திகள் உலா வந்தன.
கிம் ஜாங் உன் கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என அல்ஜஜீரா செய்தித் நிறுவனம் தெரிவித்தது.கிம் இறந்துவிட்டதாக சமீபத்தில், ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியாகும் அதிகாரபூர்வமற்ற செய்திகளுக்கு , அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தென் கொரியா உறுதியாக கூறியுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சுங்-இன் சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் , “எங்கள் அரசாங்க நிலைப்பாடு உறுதியானது”. கிம் ஜாங் உன் ஏப்ரல் 13 முதல் வொன்சன் பகுதியில் தங்கியிருக்கிறார். ஏப்ரல் 15 -ம் தேதி தனது தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைத் தவறவிட்டதால் கிம் உடல்நலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு பொலிட்பீரோ கூட்டத்தில் காணப்பட்டார் என்று வட கொரிய அரசு ஊடகங்களான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 13 முதல், இதுவரை சந்தேகத்திற்கிடமான விவகாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் கூறினார்.
ஆனால், இந்த மாத தொடக்கத்தில் கிம் ஜாங் உன் நாட்டு மக்களை சந்திக்க சென்றபோது, நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்ததாக ஜப்பான் நாட்டு பத்திரிகைக்கு சீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன்னுடன் இருந்த மருத்துவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். ஒருவேளை வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்திருந்தால், வடகொரிய ஊடகங்கள் தெரிவித்தால் மட்டுமே அது உண்மையான செய்தி என்று நம்மால் கருத முடியும்.