ஐ.நா புகாருக்கு வடகொரியா மறுப்பு !!
சிரியாவிற்கு ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை கொடுத்து உதவியதாக ஐ.நா சபை புகார் கூறியிருந்த நிலையில், அதனை வடகொரியா மறுத்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் கடந்த தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ரஷிய ராணுவத்துடன் இணைந்து சிரியா நடத்திய குண்டுவீச்சில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சிரியாவுக்கு வடகொரியா வழங்கியதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து ஐ. நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, குளோரின் குண்டு தயாரிக்கும் போது ஆசிட்டின் தாக்கத்தை தாங்கும் வகையில் கட்டிடம் அமைய பலம் வாய்ந்த செங்கற்கள் மற்றும் வால்வு குழாய்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டன.
மேலும் ரசாயன குண்டு எனப்படும் குளோரின் குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை வடகொரியாவின் ஏவுகணை நிபுணர்கள் நேரில் சென்று வழங்கியுள்ளனர். இவை சீன வர்த்தக நிறுவனம் மூலம் சட்ட விரோதமாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் பல தடவை கப்பல்களில் அனுப்பப்பட்டுள்ளன.
இவை தவிர பல ஆண்டுகளாக ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ஐ.நா.சபையின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அமெரிக்காவும் ஐ.நா.வின் குற்றச்சாட்டை ஆமோதித்தது. இந்நிலையில், ஐ.நா.வின் குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வடகொரிய வெளியுறவு செய்தி தொடர்பாளர், “அமெரிக்கா எல்லா போர் நெறிமுறைகளையும் மீறி நடந்து கொண்டுள்ளது. அதனால் தான், தன் மீதான தவறுகளை மறைக்க அடுத்தவர்கள் மீது பிரச்சனையை திருப்பி விடுகிறது. சிரியா மற்றும் ரஷ்யா உடன் எவ்வித ஆயுத ஒப்பந்தங்களும் வடகொரியா செய்து கொள்ளவில்லை” என்று கூறினார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு