#NobelPrize2022: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நார்வேயின் நோபல் கமிட்டி, 2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இதுபோன்று, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை விமர்சிப்பதற்கும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்கள் பல ஆண்டுகளாக ஊக்குவித்து வருகின்றனர் என்று நோர்வே நோபல் கமிட்டி கூறியுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன.
இதனிடையே, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் மருத்துவ விருதுடன் தொடங்கியது. அதன்படி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆலன் ஏஸ்பெக்ட், ஜான் எஃப்.கிளாசர், ஆண்டன் ஜெய்லிங்கர் ஆகிய மூவருக்கும், வேதியியலுக்கான நோபல் பரிசு கரோலின் பெர்டோஸி, மோர்டன் மெல்டல், கே.பாரி ஷார்ப்லெஸ் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டது.