நிபா வைரஸ் கொரோனாவை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் – அமெரிக்க நோய் தடுப்பு மையம்!
கொரோனாவை விட நிபா வைரஸ் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், கேரள மாநிலத்தில் மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் சில பகுதிகளிலும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு சென்ற மத்திய குழுவினர் அங்கிருந்த பழங்களின் மாதிரிகளை சேகரித்து, தொடர்ச்சியாக இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பு மருந்துகள் இல்லாததால் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறி உள்ளது.
மேலும், நிபா வைரஸின் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது சவால் நிறைந்ததாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுக்கும் விதமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், நிபா வைரஸ் கொரோனா வைரஸை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், இது உலகளாவிய நோய் தொற்றாக மாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.