உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ்,ஆப்ஸின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது,வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி இல்லை.ஆனால்,ஒருமுறை அனுப்பப்பட்ட மெசேஜை மட்டுமே நீக்க முடியும் வசதி ஏற்கனவே உள்ளது.இந்நிலையில்,விரைவில் வரவிருக்கும் புதிய அம்சம் மெசேஜை அனுப்பிய பிறகும் அவற்றைத் திருத்துவதை சாத்தியமாக்குகிறது.
வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் கண்காணிக்கும் வலைத்தளமான Wabetainfo ஆல் இந்த அம்சம் குறித்து கண்டறியப்பட்டது. அதன்படி,வாட்ஸ்அப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதிய அம்சம் குறித்து வேலை செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.ஆனால், ட்விட்டரில் புகாரளிக்கப்பட்டவுடன் வாட்ஸ்அப் நிறுவனம் அதனை நிராகரித்தது.இருப்பினும்,இறுதியாக,ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, தற்போது வாட்ஸ்அப் மீண்டும் எடிட் அம்சத்தை அறிமுகப்படுத்துவது குறித்து வேலை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக,Wabetainfo தற்போது எடிட் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளது.அதன்படி,நீங்கள் அனுப்பிய மெசேஜை தேர்ந்தெடுக்கும்போது,ஸ்கிரீன்ஷாட் ஒரு பிரத்யேக திருத்த விருப்பத்தைக் காட்டுகிறது.மேலும்,மெசேஜை நகலெடுத்து அனுப்புவதற்கான விருப்பங்களுடன்,பயனர்கள் திருத்த விருப்பத்தையும் பெறுவார்கள்.குறிப்பாக,திருத்த பட்டனை தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் செய்தியை அனுப்பிய பிறகும்,அதில் ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தால் அதை நீங்கள் சரிசெய்யலாம்.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் சோதிக்கப்பட்டுள்ளது.மேலும்,அதே அம்சத்தை iOS மற்றும் டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப் பீட்டாவில் கொண்டு வர WhatsApp நிறுவனம் முயற்சித்து வருகிறது.இதுதொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.