330 மில்லியன் டாலரை இழந்த நேபாள சுற்றுலாத்துறை.!

நேபாளத்தின் சுற்றுலாத்துறைக்கு 330 மில்லியனுக்கும் அதிகமான டாலரை இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இழப்பு ஜூலை 21 வரை 332 மில்லியன் டாலரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள சுற்றுலா வாரியம் மற்றும் நேபாளத்தின் சிவில் ஏவியேஷன் ஆணையம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு குழு, ஹோட்டல், பயணங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறையில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது ஒவ்வொரு மாதமும் 83 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளதாக அந்த குழு கூறியது.
நேபாளில் கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் செயல்பட அனுமதித்தாலும், சுற்றுலாத் துறை, குறிப்பாக ஹோட்டல் மற்றும் விமானத்துறைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ஜூலை 21-ஆம் தேதி வரை தொடர்ந்து நிறுத்தி வைக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறை பெரும் இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நேபாள சுற்றுலா தொழில்முனைவோர் குழு நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
அதில், சில சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க விமானங்களை அனுமதிக்குமாறு சுற்றுலா தொழில் முனைவோர் அரசிடம் கேட்டுக் கொண்டனர்.
மேலும், சுற்றுலா வாகனங்களை இயக்க நேபாளி அரசு அனுமதிக்க வேண்டும், மலைகளில் இருந்து குப்பைகளை அகற்ற வேண்டும், சுற்றுலா தலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலா தொழில் முனைவோர் கோரிக்கை வைத்தனர்.
நேபாளில் இதுவரை கொரோனாவால் 15,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.