கடன் மோசடி வழக்கில் சிக்கிய நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
கடன் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக இருந்தாா். அவர் இருக்குமிடத்தை அறிந்த அந்நாட்டு, காவல்துறையினா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 19 ஆம் தேதி கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடி, ஜாமீன் கோரி லண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து, லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.