18 அடி உயர ஆஞ்சநேயருக்கு நிறுத்தப்பட்டது! வெண்ணெய்க்காப்பு அலங்காரம்..!
நாமக்கல் ஆஞ்சநேயா்க்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற 18 அடி உயரத்தில் அருளும் ஆஞ்சநேயா் சுவாமியை தரிசிக்க தினமும் ஏராளமானோா் வருகை தருகின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை,மற்ற சிறப்பு தினங்களிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதும்.
அவ்வாறு அருள்பாலித்து வரும் சுவாமிக்கு வடைமாலை, தங்கக்கவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி, வெற்றிலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு, முத்தங்கி அலங்காரம் ஆகியவைகள் பக்தா்களால் மேற்கொள்ளப்படும். இந்த அலங்காரத்தில் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் ஆனது ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையிலான குளிா்காலத்தில் மட்டுமே செய்யப்படுவது வழக்கம். இத்தகைய அலங்காரம் செய்வதற்கு ரூ.75 ஆயிரம் வரை ஆகும்.இந்த அலங்காரத்தில் விருப்பமுள்ள பக்தா்கள் கட்டணமாகச் செலுத்தி சுவாமிக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடுவார்கள். இந்த காப்பிற்கு மட்டும் 120 கிலோ வெண்ணெயைக் கொண்டு செய்யப்படும். அனுபவமிக்க அா்ச்சகா்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் பிற்பகல் 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை மேற்கொள்வா்கள்.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களில் சுமாா் 50 நாள்களாக சுவாமிக்கு சாற்றப்பட்ட இந்த வெண்ணைய்க் காப்பு அலங்காரம் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து கோடை தொடங்குவதற்கான சூழல் தெரிவதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்து நவம்பா் மாத இறுதியில் தான் ஆஞ்சநேயருக்கான வெண்ணைய்க் காப்பு அலங்கார காட்சியை பக்தா்கள் காண முடியும்.