முரசொலி மூலப்பத்திரம்..தேசிய பட்டியலின ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவு
முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் பிப்., 28ம்தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று கூறி பாஜகவை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்தப் புகார் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேசிய பட்டியலின ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையத்தின் துணை தலைவர் முருகன் உத்தரவிட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பட்டியலின ஆணைய துணை தலைவர் முருகன் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மேலும் மு.க. ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை முரசொலி நிலம் குறித்த மூலப்பத்திரத்திரம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணைய தலைவரை வழக்கில் இணைத்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக வரும் 28ஆம் தேதி ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.