பொய்களை பரப்புவதாக டிரம்பின் பேட்டியை நிறுத்திய அமெரிக்க செய்தி நிறுவனங்கள்
அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்தியுள்ளது.
உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார்.
ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஜனநாயக கட்சியினர் வாக்குகளை சட்டவிரோதமாக எங்களிடம் இருந்து திருட முயற்சி செய்கின்றனர் எனக் கூறினார்.பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த டிரம்பின் இந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 17 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றது.ஆனால் திடீரென்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.டிரம்ப் தவறான செய்திகளை கூறுவதாகவும், பொய்களை பரப்புவதாகவும் பேட்டியை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சில செய்தி நிறுவனங்கள் மட்டும் டிரம்பின் முழு பேட்டியை ஒளிப்பரப்பு செய்ததாக கூறப்படுகிறது.