தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பி.சி.சி.ஐ..! பின்னுக்கு தள்ளிய இளம் வீரர்கள்….
உலக கோப்பையை வென்றுக் கொடுத்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ-யின் புதிய சம்பள உயர்வில் இந்தியாவிற்கு இளம் வீரர்களை விட குறைவான சம்பளப் பணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களின் ஆண்டு வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திவந்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பி.சி.சி.ஐ. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருமானத்தை மாற்றி அமைத்தது. அதில் A+, A. B மற்றும் C ஆகிய பிரிவுகளில் வீரர்களை பிரித்துள்ளது.
அதில் A+ பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு இனிமேல் ஆண்டிற்கு 7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.
A பிரிவில் மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரகானே, விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு 5 கோடி ரூபாய் ஆண்டு சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கே.எல். ராகுல், உமேஸ் யாதவ், யுஸ்வேந்திர சகால் , ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் B பிரிவில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு 3 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஆகும்.
அக்ஸர் பட்டேல், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், மனீஸ் பாண்டே, கருண் நாயர், பார்த்தீவ் பட்டேல், ஜெயந்த் யாதவ் போன்ற வீரர்கள் C பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருமானக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் யுவராஜ் சிங் எந்த பிரிவிலும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது கணவர் தன்னை கொடுமை படுத்துவதாகவும், மற்ற பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் முகமது ஷமியின் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளதால் அவருடைய சம்பள விவரத்தை பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது.
இந்த பிரிவில் கடந்த ஆண்டு வரை விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்தனர். மேலும் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றனர். இந்நிலையில் தற்போது அவர்கள் தோனியை விட அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிசிசிஐ அளித்த விளக்கத்தில், மூன்று பிரிவு போட்டிகளிலும் அதிக போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டுமே A+ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் A+ பிரிவில் இடம்பெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.