லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் விற்பனை – அறிக்கை..!
லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கரால் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது, லிங்க்ட்இன் தளத்தில் 756 மில்லியன் பயனர்கள் இருப்பதால்,அதில் சுமார் 92 சதவீத லிங்க்ட்இன் பயனர்களின் தரவு ஹேக் செய்யப்படுள்ளதாகவும், அதில் அவர்களின் தொலைபேசி எண்கள்,முகவரிகள், இருப்பிடம் மற்றும் ஊகிக்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தரவுகள் உள்ளன என்றும்,
கடந்த ஜூன் 22 அன்று,ஒரு மில்லியன் பயனர்களின் தரவுகளின் மாதிரியை ஆன்லைனில் ஹேக்கர் ஒருவர் விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,இதற்கு மறுப்பு தெரிவித்து லிங்க்ட்இன் தனது அறிக்கையில் கூறியதாவது:
“விற்பனைக்கு வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சென்டர் தரவுகளின் தொகுப்பை எங்கள் குழுக்கள் விசாரித்தன.இது தரவு மீறல் அல்ல,மேலும், தனிப்பட்ட பயனர்களின் தரவு எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவாக கூற விரும்புகிறோம்.எங்கள் ஆரம்ப விசாரணையில் இந்தத் தரவு லிங்க்ட்இன் மற்றும் பிற பல்வேறு வலைத்தளங்களிலிருந்து ஸ்கிராப் செய்யப்பட்டது மற்றும் கடந்த ஏப்ரல் 2021 ஸ்கிராப்பிங் புதுப்பிப்பில் தெரிவிக்கப்பட்ட அதே தரவை இது உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டுள்ளது.ஸ்கிராப்பிங் என்பது வலைத்தளங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுத்து அதனை நகலெடுக்க பயன்படுத்தும் முறையாகும்.
யாராவது பயனர்களின் தரவை எடுத்து தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கும்போது, லிங்க்ட்இன் மற்றும் எங்கள் உறுப்பினர்கள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை என்றால்,அதனைத் தடுத்து சம்மந்தப்பட்டவர்கள் அவற்றை பொறுப்பேற்க நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.