கொரோனா நோயாளியை கண்டறியும் மோப்ப நாய்….!
கொரோனா தொற்று உள்ளவர்களை தான் மோப்ப சக்தியை கொண்டு கண்டறியும் மோப்ப நாய்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் ஒருவர் கொரோனா நோயாளியா? என்பதை 94% துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து நோய் தடுப்பு பிரிவு தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறுகையில், ஒருவரின் உடலிலிருந்து வெளிப்படும் வாசனை மூலமாக, அவருக்கு கொரோனா உள்ளதா என்பதை மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் என்பது, எங்கள் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இதற்காக பயிற்சியாளர்கள் நாய்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
நாய்களிடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடை, முக கவசம் சாக்ஸ் போன்றவற்றை கொடுத்து மோப்ப சக்தியை கொண்டு உணர செய்கின்றன. அந்த வகையில், 3,750 பேரின் மாதிரிகள் இந்த சோதனைக்காக சேகரிக்கப்பட்டது. அவற்றில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் 322 பேர், நோயால் பாதிக்கப்படாத 675 பேர் என துல்லியமாக அடையாளம் கண்டுள்ளதாகவும், இது மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த மோப்ப நாய்களின் உதவியுடன், விமான நிலையங்களில் இரண்டு மோப்ப நாய்களை கொண்டு 30 நிமிடங்களிலேயே 300 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பது குறித்து எளிதாக கண்டறிந்து விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.