நாளை பிரதமரை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி..!
கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வாங்க இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறது. கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 18 வயதுக்குட்பட்ட 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்க உள்ளார். இந்தியாவில் கிரிக்கெட், ஹாக்கி மட்டுமே பிரபலமாக இருந்து வருகிறது. மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.