‘ MGR என் அப்பா ‘ “நூற்றாண்டு விழா அழைப்பு வரவில்லை” MGR அண்ணன் மகன் ஆதங்கம்..!!
“நம்பியார் குடும்பத்தினருடன் எங்களுக்கு இப்போதும் நல்ல உறவு உள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களுக்கு அழைக்காதது வருத்தமாக உள்ளது’’ என எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி.சந்திரன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 3 நாள்கள் நடைபெறும் உலகத் தமிழாய்வு மாநாட்டில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி. சந்திரன் இன்று வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”மறைந்த தமிழக முதல்வரும் எனது சித்தப்பாவுமான எம்.ஜி.ஆர், கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் அவர். குடும்ப அரசியல் கூடாது என்பதற்காக, குடும்பத்தினர் யாரையும் கடைசிக் காலம் வரை அரசியலுக்குக் கொண்டு வரவில்லை. அப்படிப்பட்ட மாமனிதருக்கு தற்போது தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
அப்போது இவ்விழாவில் நானும் எங்கள் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டோம். அனைத்து விழாக்களிலுமே எங்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.ஆனால், தற்போது அரசு சார்பில் நடைபெறும் விழாவில் எங்களை அழைக்காதது வருத்தமளிக்கிறது. MGR எனக்கு அப்பா முறை அதாவது சித்தப்பா முறை.எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையில், உலக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். அவரது மரணத்துக்குப் பின்னர் லேசான தடுமாற்றம் இருந்தாலும், தற்போது எங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து வெளிநாடுகளில் நல்ல வேலையில் உள்ளனர். நம்பியார் குடும்பத்தினருடன் எங்களுக்கு தற்போதும் நல்ல உறவு உள்ளது. அரசியலில் மிகுந்த ஆர்வம் உள்ளதால் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறேன்” என்றார்.
DINASUVADU