சப்ளையர் இல்லாமல் டேபிளுக்கு வரும் சாப்பாடு.! சமூக விலகளுக்கு முன்னுதாரணம் ஸ்வீடன் ஓட்டல்.!
சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் சுவீடன் நாட்டில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சாதுரியமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன.
கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் சுவீடன் நாட்டிலும் பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,272ஆகவும் உயிரிழப்பின் எண்ணிக்கை 3,313 ஆகவும் உள்ளது. இதுவரை 4,971 பேர் குணமடைந்து உள்ளார்கள்.
இதற்கிடையில், இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழி இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. அந்தவகையில் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்றவைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் சுவீடன் நாட்டில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சாதுரியமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. அதாவது, கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், சுவீடன் நாட்டில் வேர்ம்லாந்தில் ‘டேபிள் ஃபார் ஒன்’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் ஒரு மேசை மற்றும் ஒரு நாற்காலி மட்டுமே போடப்பட்டிருக்கும். அதில், ஒருவர் மட்டுமே அமர்ந்து உணவு அருந்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த ஓட்டலில் உணவு பரிமாற சப்ளையர் கிடையாது. கயிறு ஒன்றில் பிக்னிக் கூடை கட்டப்பட்டு அதில் உணவு வைத்து மேசைக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஸ்வீடனை சேர்ந்த ரஸ்முஸ் பெர்சன், லின்டா கார்ல்சன் தம்பதி கூறுகையில், கொரோனா தாக்கத்துக்குப் பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த ஓட்டல் உருவாக்குவதற்கு என் மனைவின் பெற்றோரே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். தினமும் அவர்களுக்கு ஜன்னல் வழியாக உணவை வழங்கியதன் விளைவாகவே இந்த ஓட்டல் உருவானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனிமையில் அமர்ந்து உணவுக்காக காத்திருந்து உணவு சாப்பிடுவதை இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் ரசிக்கின்றனர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, இந்த ‘டேபிள் பார் ஒன்’ ஓட்டல் உலகிற்கு சிறிய முன்னுதாரணமாக விளங்குகிறது.