MBBS கலந்தாய்வுக்குத் தயாராகும் ஓமந்தூரார் மருத்துவமனை…!

Default Image

எம்.பி.பி.எஸ் கலந்தாய்வை நடத்துவதற்காக ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வு நடைபெறவில்லை. மற்றொரு புறம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றுவது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
3 தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, நீட் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாகக் கொண்ட தரவரிசைப் பட்டியல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணிகளில் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 85 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையிலான தரவரிசையும் தயாரிக்கப்பட்டுள்ளது. 
ஓமந்தூரார் மருத்துவமனை: இந்நிலையில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரி கூறியது: கலந்தாய்வு தொடர்பான எந்த உத்தரவு வந்தாலும், 24 மணி நேரத்துக்குள் அதற்காகத் தயாராக வேண்டும். எனவே, சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாணவர், பெற்றோர் காத்திருக்கும் இடங்கள் அமைப்பு, இணையதள இணைப்புக்கான வயரிங் பணிகள், திரைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
கலந்தாய்வுப் பணிகள் இல்லை: ஆனால் கலந்தாய்வுக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை புதுப்பிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) ஆய்வு செய்ய உள்ளது. அதற்காகவே மருத்துவமனைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
திருவல்லிக்கேணி கஸ்தூர்பாய் காந்தி மருத்துவமனையின் கீழ் செயல்படுவதாகவே ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டது. தற்போதும் அந்த மருத்துவமனையின் கீழ்தான் கல்லூரி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்