மாதத்தில் நான் மார்கழி மகிழ்ந்துரைக்கும் திருமால்-மார்கழி மாதச் சிறப்பு
- மாதத்தில் நான் மார்கழி என்று உவந்துரைக்கும் திருமாலை போற்றும் மாதமாகிய மார்கழி டிச.,17 அன்று பிறக்கிறது.
- மார்கழி மாதத்தின் சிறப்பினைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணர் மார்கழி மாதத்தை சிறப்பித்து கூறியிருக்கிறார்.மார்கசீர்ஷம் என்று வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் வழக்கம் உள்ளது.மார்கம் என்றால் வழி என்று பொருள் , சீர் என்றால் தலை சிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள் இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி விளங்குறது.மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது.இறைவழிபாட்டில் ஈடுபட்டு இறைவனின் அருளை பெற வேண்டிய மாதம் ஆகும்.
மார்கழி அதிகாலை அற்புதம்:
மனிதருக்கு ஒரு ஆண்டு என்றால் தேவர்களுக்கு அது ஒரு நாள் ஆகும்.அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது எனவும் அழைக்கப்படுகிறது.அந்த அதிகாலை நேரம் தான் மார்கழி மாதம்.தெளிவான மனதுடன்,உடலில் சுறுசுறுப்பு தவலும் விதமாக அந்த அதிகாலை நேரத்தில் தேவர்களை வழிபடுவதற்கு சிறந்த ஒரு நேரமாக கருதப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாக பாசுரங்கள் பாடப்படும்.இதன் பொருட்டாகவே திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம் என்று மார்கழியின் சிறப்பினை முதுமொழி ஒன்று எடுத்துரைக்கிறது.பொதுவாக ஆடி, புரட்டாசி,மார்கழி ஆகிய மாதங்களில் சுப நிகழ்ச்சிகள் இருக்காது.அம்மாதங்களில் இறை வழிபாட்டினை மேற்கொள்வர்.அதன்படி ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடும்,புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடும் நடைபெறும் ஆனால் மார்கழியில் மட்டும் அனைத்து வழிபாட்டுக்கும் உரியதாக விளங்குகிறது. இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வீட்டு வாசலில் வண்ணமாக்கோலம் இட்டு இறை வழிபாடு செய்வது வழக்கமாகும்.
தேவர்களுக்கான பொழுதில் அதிகாலை நேரமாக இந்த மார்கழி மாதம் தான் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.மேலும் இம்மாதத்தினை தனுர் மாதம் என்றும் அழைப்பர்.அறிவியல் ஆய்வுகள் எல்லாம் இந்த மாதத்தில் அதிகாலை எழுவது மிகவும் நல்லது என்று கூறுகிறது காரணம் என்ன தெரியுமா.?
மனித வாழ்க்கையில் வழிபாடு தொடர்பாக முன்னோர்களால் சொல்லி வைக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னால் ஒரு சூட்சும அறிவியல் ஒலிந்து கொண்டு இருக்கும் என்பது எல்லோரும் அனுபவத்தில் கண்டு இருப்போம் அதே போல் மார்கழி குறித்த ஆன்மீகத்தை தெரிந்து கொண்ட நாம் தற்போது அம்மாதம் அறிவியலோடு கொண்டுள்ள தொடர்பை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
மார்கழி மாத வைகறை பொழுதான அதிகாலைநேரத்தில் துயில் கலைந்து குளித்து வழிபாடு செய்வது அறிவியல் ரீதியாக நமது உடலுக்கும், மனதுக்கும் நல்லது.ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்படும் மேலும் மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதின் பனி பொழிவானது நம் மனதையும்,ஆரோக்கியத்தையும் திடமடைய செய்கிறது. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 முதல் 6 மணி வரை ஓசோன் படலத்தின் தூய்மையான காற்று பூமியில் அதிகளவு பரவும் அதனை நாம் சுவாசிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு மனத் தெளிவு ஏற்படும்.இதனால் தான் அறிவியல் மதிப்புக்குரிய மாதமாக மார்கழி திகழ்கிறது என்று கூறுகிறது.
மார்கழி என்றால் மற்றும் ஒரு சிறப்பு என்றால் அது திருப்பாவையும்-திருவெம்பாவையும் தான். ஆண்டாலும் – மாணிக்கவாசகரும் இன்றி மார்கழி முழுமை பெறாது என்று தான் சொல்ல வேண்டும் இவர்களிருவரும் இறைவன் பால் அதிதீவிர காதல் வைத்தவர்கள். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் உன்னை தவிர “என் வாழ்க்கை துணை வேறு யாரும் இல்லை என்னை சீக்கிரம் வந்து ஆட்கொள் “என்று திருமாலை திடமுற வேண்டி நோன்பு இருந்து இறைவனை மணந்தார்.அதே போல் மாணிக்கவாசகரும் “அரச பணியை விட ஆண்டவன் பணியே சிறந்தது” என்று இறைவன் வழி சென்று அவர் புகழ்பாடி சரணாகதி அடைந்தார்.
இவர்கள் இயற்றிய திருப்பாவை , திருவெண்பாவை ஆகிய பாசுரங்களை அதிகாலை வழிபாட்டில் ஆலயங்களில் வேதங்களுக்கு பதிலாக பாடுவது வழக்கம் அதே போல் தொண்டரடி ஆழ்வார் இயற்றிய திருப்பள்ளியெழுச்சியும் பாடப்படும்.
மேலும் மார்கழியில் பாவை நோன்பு ,திருவெண்பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபடுவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இம்மாதத்தின் முக்கிய விரதங்கள் :
திருவாதிரை,வைகுண்ட ஏகாதேசி,அனுமன் ஜெயந்தி ,பாவை நோன்பு,திருவெண்பாவை நோன்பு,படி உற்சவம்,விநாயகர் சஷ்டி விரதம் போன்ற விரதங்கள் இம்மாதத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் விரதங்கள் ஆகும்.