மாலியில் ஆட்சியை பிடித்த ராணுவம் – அதிபர் மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது.!

மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் ராணுவம் புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்னர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் திடீரென கிளர்ச்சியாளராக மாறினர்.
இந்நிலையில், அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கட்டுப்பாட்டை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிய அதிபர், தமது பதவியை ராஜினாமா செய்வதாகவும், தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் சிந்துவதை தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் கூறுகையில், மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் முதலில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், மாலியில் மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.