பாலியல் புகாரில் கைது செய்ய இடைக்கால தடை.. விரைவில் ஆஜராகும் மலையாள நடிகர் சித்திக்.!
பாலியல் வன்கொடுமை வழக்கில், கேரள போலீசாரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட மலையாள நடிகர் சித்திக்கை, கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர விடுதியில் மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகர் சித்திக் மீது, பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, கடந்த வாரம் கைது செய்யப்படவிருந்த நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்ததால், அவர் தலைமறைவானார். அதுமட்டுமின்றி ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இதைத் தொடர்ந்து, அவரை கேரள போலீசாரால் தேடப்படும் நபராக மாநிலம் முழுவதும் லுக்அவுட் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. இந்த நிலையில், நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சித்திக்கை இரண்டு வாரங்களுக்கு கைது செய்ய விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மேலும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் புகார் அளித்துள்ளதாக சித்திக் தரப்பு, வாதத்தை முன் வைத்த நிலையில், புகார்தாரர் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது, உச்ச நீதிமன்ற இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியதைத் தொடர்ந்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.