2019-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து :
ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.இதன் பின்னர் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புல்வாமா தாக்குதல் :
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஒன்றை நிகழ்த்தியது. அந்த சண்டையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விமானப்படை வீரர் அபிநந்தன் தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவம் வசம் அவர் சிக்கிக்கொண்டார்.
பின்னர் பாகிஸ்தான் ராணுவம் கைவசம் இருந்த விமான படை வீரர் அபிநந்தன், இரு நாடுகளின் பேச்சுவார்த்தையினை அடுத்து இந்தியாவின் வாகா எல்லையில் அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
நிர்மலா தேவி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் . கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார்.
மக்களவை தேர்தல்:
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற்றது.
விக்ரம் லேண்டர்:
சந்திராயன் விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.
ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது.
ப.சிதம்பரம் கைது :
ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை செய்தது. மாறிமாறி கைது செய்யப்பட்டதால் சிதம்பரம் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த பின்னர் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பேனர் விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்பு:
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.
முதல் ரஃபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது :
பாஜக அரசானது 2014-ம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது.முதல் ரஃபேல் விமானம் பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்திடமிருந்து அக்டோபர் 8 -ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் மோடி – ஷி ஜின்பிங் சந்திப்பு:
அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி தமிழக பரமபரிய முறை படி வேஷ்டி சட்டை அணிந்திருந்தார்.
விக்கிரவாண்டி , நாங்குநேரி இடைத்தேர்தல்:
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்,லடாக் :
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.பின்னர் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளிக்கப்பட்டு அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது .
அயோத்தி வழக்கு:
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அயோத்தி தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலமானது, இந்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இஸ்லாமிய அமைப்பான சன்னி வக்பு வாரியத்திற்கு அவர்கள் விருப்பப்படி 5 ஏக்கர் நிலம் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கவேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை நிறுவி கோவில் கட்டுவதற்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது.
15 தொகுதிகளுக்கு கர்நாடகாவில் இடைத்தேர்தல்:
கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.பின்னர் காலியாக இருந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்கசெய்த 2 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு விசாரணை இருந்த நிலையில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை.
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர் :
சந்திராயன் விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.
அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது.நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்களை இருப்பதாக மதுரை சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்தார்.
குடியுரிமை மசோதா :
பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லீம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறியது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து கடந்த 13-ம் தேதி சட்டமாக இயற்றப்பட்டது.