எஞ்சின் கோளாறு; 600 கார்களை திரும்ப பெறும் – மஹிந்திரா நிறுவனம் ..!
நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்ட 600 டீசல் என்ஜின் கார்களை திரும்ப பெறுவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், என்ஜின் கோளாறு காரணமாக தனது 600 டீசல் கார்களை திரும்ப அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த வாகனங்கள் ஜூன் 21 முதல் 2021 ஜூலை 2 வரை அதன் நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்டதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து,மும்பையைச் சேர்ந்த மஹிந்திரா கார் உற்பத்தியாளர் ஒருவர், கார்களில் உள்ள தவறான டீசல் என்ஜின்களை ஆய்வு செய்து மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
“அசுத்தமான எரிபொருள் காரணமாக பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாகனங்களின் என்ஜின்களை மஹிந்திரா நிறுவனம் ஆய்வு செய்து மாற்றும்.
மேலும்,பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீசல் என்ஜின்களில் ஆய்வு மற்றும் தேவையான மாற்றங்கள் இலவசமாக மேற்கொள்ளப்படும். இதற்காக, நிறுவனத்தால் அவர்கள் தனித்தனியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள் “,என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும்,எந்த வகையான கார் மாடல்களின் என்ஜின்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மஹிந்திரா நிறுவனம் குறிப்பிடவில்லை.
மஹிந்திரா நிறுவனம்:
மஹிந்திரா நிறுவனம் நாட்டின் ஐந்தாவது பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளராக உள்ளது. இது தற்போது தார் எஸ்யூவி, ஸ்கார்பியோ, மர்ராசோ மற்றும் எக்ஸ்யூவி 300 போன்ற பயன்பாட்டு வாகனங்களை நாசிக் தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிறது.
கடந்த வாரம், மஹிந்திரா இந்திய வாடிக்கையாளர்களுக்காக தனது பொலெரோ நியோ மாடலை அறிமுகப்படுத்தியது.இது TUV300 எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.மேலும்,மஹிந்திரா தனது முதன்மை வாகனமான எஸ்யூவி 500 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை எக்ஸ்யூவி 700 என பெயரிடப்பட்ட புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.