“கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது” தமிழ்நாடு அரசுக்கு அமீர் கோரிக்கை.!

திரைப்பட விழாக்களை கல்வி நிறுவனங்களில் நடத்த தடை விதிக்க வேண்டும் என இயக்குநர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.

Ameer

சென்னை : அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இவரது கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர் இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசை பாராட்டியும், திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

மகாவிஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவர் மீது, உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவரது வார்த்தைக்கேற்ப செயலை துரிதப்படுத்திய தமிழக காவல்துறைக்கும் எனது பாராட்டுகளும், நன்றியும் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம் என்கிற போர்வை

சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப்பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை, இப்போது ஆன்மீகம் என்கிற போர்வையில் “முற்பிறவி பாவங்கள்” என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டம். அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது என கூறிஉள்ளார்.

தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும்

தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கை பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மத்தியில், தனது ஞானக்கண் கொண்டு அநீதியை தட்டிக் கேட்ட தமிழாசிரியர் சங்கருக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அறிவுரை சொல்ல இன்ஸ்டகிராம் பிரபலமா -ஆ?

சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து சமீப காலமாக, தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், INSTAGRAM, REELS போன்ற சமூக வலைத்தளங்களிலும் YOUTUBE ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது.

எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும் மிகவும் வேதனைக்குரிய விசயமாகும் என்றார்.

கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது

அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது. திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வரிடம்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்