“ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் கொரோனாவை வென்றுவிடுவோம் “- பிரிட்டன் பிரதமர் தீபாவளி வாழ்த்து!
ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் விரைவில் கொரோனாவை வென்று விடுவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வரும் 14 ஆம் தேதி, இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று, புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியர்கள் இருக்கும் பல நாடுகளில் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில், பிரிட்டன் நாட்டில் இந்தியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் அங்கு தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும். இந்தியாவை போலவே அவர்கள் உற்சாகத்துடன், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கியும் தீபாவளியை கொண்டாடுவார்கள். இதன்காரணமாக அங்கு “உலக தீபாவளி தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தற்பொழுது பிரிட்டனில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் காணொளி காட்சி வாயிலாக தீபாவளி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்நன்னாளில் இருள் மீது ஒளி வெற்றி பெறுகிறது, தீமை அழிகிறது, அறியாமை அகலுகிறது என்பதை தீபாவளி நமக்கு கற்றுக்கொடுத்ததை போல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை வெல்வோம் என கூறியுள்ளார்.
மேலும், இந்த தீபாவளி தினத்தன்று ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் விரைவில் கொரோனாவை வென்று விடுவோம் என கூறிய அவர், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நமது தியாகங்களும், சரியானதை செய்வதற்கான உங்கள் உறுதியும் உண்மையில் உயிர்களை காப்பாற்ற உதவுகின்றன என்பதை அறிந்து கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.