எலுமிச்சையை அதிகம் உபயோகிப்பதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்…!
எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் கிடைக்கிறது என்பது அனைவருமே அறிந்தது தான். பெரும்பாலும் சில சமயங்களில் எலுமிச்சம்பழம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல், குளிர் பானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், சில அழகு சம்பந்தப்பட்ட செயல்முறைகளுக்கும் எலுமிச்சை சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சையை உட்கொள்வதே நமது உடலுக்கு தீமையாக மாறி விடும். இன்று இது குறித்த சில தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
எலுமிச்சையின் தீமைகள்
- வயிற்றில் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை உட்கொள்ளக் கூடாது. ஏனென்றால் எலுமிச்சையில் அதிக அளவில் அமிலம் உள்ளது. இந்த அமிலத்தின் காரணமாக வயிற்றுப்புண் அதிகரிக்கும். எனவே வயிற்றுப்புண் உள்ளவர்கள் எலுமிச்சையை உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
- அதிக உணர்திறன் கொண்ட பற்கள் உள்ளவர்கள் மற்றும் முரசுகள் கரையும் வகையில் இருப்பவர்களும் எலுமிச்சையை அதிகம் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களின் எனாமலை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது. அதே போல பல் துலக்கிய உடனே எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை கலந்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நமது பற்கள் பலவீனமடையும்.
- காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடல் எடை குறையும் என்று நம்பி பலர் காலையிலேயே எழுந்து எலுமிச்சை சாறை குடிக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது தவறு. ஏனென்றால், எலுமிச்சையில் உள்ள அமிலத் தன்மை காரணமாக, உணவு இன்றி காய்ந்து கிடைக்கக்கூடிய நமது வயிற்றில் காயங்களை ஏற்படுத்தும்.
- வாய்ப்புண் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது வாய் புண் சரியாக விடாமல் மேலும் எரிச்சலை தூண்டும் விதமாக இருக்கும்.
- அதே போல எலுமிச்சையை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்தை அதிகப்படுத்தும். இருந்தாலும் இது வயிற்றை மந்தமாக்க கூடிய தன்மை கொண்டது. மேலும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.