தலைநகரில் தாமரையை அப்புறப்படுத்திய கெஜிரி..இன்று 3-வது முறை முதல்வராக தேர்வாகிறார்..!!
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வந்தது.இந்நிலையில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார்.நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அசுர வெற்றிப்பெற்ற ஆம் ஆத்மிக்கு 53 சதவீத வாக்குகளும் தோல்வியை தழுவிய பா.ஜ.க.வுக்கு 38 சதவீத வாக்குகளும் மற்றும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த காங்கிரசுக்கு 5 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.