கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் : தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு.?
கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் -பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி இந்த தேர்தலில் உள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் பெற பாரதீய ஜனதாவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி இரண்டு வீடியோக்களை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பி ஸ்ரீராமுலு மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகிய இருவரும், அப்போதய தலைமை நீதிபதியின் உறவினர் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பேரம் பேசிய காட்சிகள் அடங்கியிருந்தது.
சுரங்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக இருவரும் நீதிபதி உறவினருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக புகார் எழுந்தது. நேற்று, கர்நாடக உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் இந்த வீடியோ ஒளிபரப்பட்டது. ஆனால், தேர்தல் கமிஷன் தலையிட்டு வீடியோவை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி உறவினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவரையும், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி மனு கொடுத்துள்ளது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ பி ஸ்ரீராமுலு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.