கந்தசஷ்டி திருவிழா:பழனி முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம்.!
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது .
கடந்த 15-ஆம் தேதி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி சூரசம்ஹார நிகழ்வும் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்து முடிவடைந்தது .அதே போன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான சண்முகர் ,வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று காலை மலைக்கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் உள்ள மணமேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் காலை 9.30 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் நடந்தது .
தெய்வானை மற்றும் வள்ளிக்கு திருமாங்கல்யத்தை அணிவித்து மாலை மாற்றி திருக்கல்யாணத்தை பட்டத்து குருக்கள் நடத்தி வைத்தார்.அதனுடன் கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பை கூறி 16 வகையான தீபாராதனைக்கு பின்னர் குருக்கள் பாடல்கள் பாடி மகா தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கப்பட்டது.அதன் பின் சண்முகர் ,வள்ளி-தெய்வானையை மணக்கோலத்தில் சப்பரத்தில் வைத்து மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகரின் சன்னதியில் எழுந்தருளப்பட்டு,அங்கு தீபாராதனை நடைபெற்றது.
அதே போன்று முத்துக்குமாரசாமி,வள்ளி-தெய்வானையின் திருக்கல்யாணம் பழனிச்சாமி பெரியநாயகி அம்மன் கோயிலில் இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் நடந்தது.அதன்பின் மணக்கோலத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமியும் மற்றும் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையும் இரவு 9 மணிக்கு மேல் எழுந்தருள வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.