களத்தில் இறங்கும் கமல் ஹாசன்!அறிக்கை மூலம் கமல் வெளியிட்ட முக்கிய தகவல்…
தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.அவரது கருத்துக்கள் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், தனது அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் வார இதழ் ஒன்றிலும் எழுதி வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், தான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாகத் திகழும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21ம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகக் கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், அன்று முதல் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரிடையாகச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம் இது என கூறியுள்ள கமல்ஹாசன், இந்த பயணம் தனக்கான புரிதல் என்றும் தனக்கான கல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தனக்கு மட்டும் இருந்தால் போதாது என தெரிவித்துள்ள கமல்ஹாசன், தலைவன் என்பவன் வழிநடத்த மட்டும் அல்ல என்றும், பின்தொடரவும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
தனி ஆளாக ஆட்சியைப் பிடித்துவிட முடியாது எனக் கூறியுள்ள கமல்ஹாசன், அதற்கு முன்பாக மக்களை உயர்த்த வேண்டும் என்றும், அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதை நோக்கியதாகவே தனது பயணம் இருக்கும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், மக்களின் ஆதரவோடு தொடங்கும் இந்த பயணத்தில் கரம் கோர்த்திடுங்கள்; களத்தில் சந்திப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்மூலம், நேரடி அரசியலுக்கு நடிகர் கமல் எப்போது வருவார் என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..