கைத்தான் பப்பா..
திடீரென அவள் என்னை பதற்றத்துடன் எழுப்பினாள்.
“அப்பா.. யாரோ இந்த நேரத்துல போன் பண்றாங்க… என்னன்னு கேளுங்கப்பா…” தூக்க கலக்கம் முழுவதும் நீங்காமல்..”ஏய்! யாரு என்னன்னு நீ கேட்டுத் தொலைக்க வேண்டியது தான? இப்படியா சாமத்துல எழுப்புவ.?”
“நீங்க என்ன ஏதுன்னு கேளுங்கப்பா… எனக்கு பதட்டமா இருக்குல்ல…” என சொல்லியபடி செல்போனை அவள் என்னிடம் நீட்டினாள்.
எனக்கும் அவளது பதட்டம் கொஞ்சம் தொற்றிக் கொண்டது. அவள் பதற்றம் அடைவதும் சரிதான்! ஏதாவது கெட்ட செய்தி என்றால் தான் பொதுவாக இந்த நேரத்தில் அழைப்பு வரும் என நினைத்தபடியே அவளிடம் இருந்து செல்போனை வாங்கினேன். அதில் எனது போனில் பதிந்து வைத்திருந்த நம்பர் அல்லாமல் ஒரு புது எண்ணில் இருந்து கால் வந்திருந்தது.
சற்றே யோசனையுடன்…”ஹலோ… யாரு?” என்றேன்.
“எய்யா… நீ ஜெனிட்டா மகன் பிரவீன் தானே?”
“ஆமா… நான்தான் சொல்லுங்க…”
“எய்யா… நான் பழையகாயல்ல இருந்து தெரசிட்டா அத்தை பேசுறேன்ய்யா… நம்ம கைத்தான் பப்பா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எறந்துட்டார்ய்யா… இன்னைக்கி சாயிங்காலம் மூணு மணிக்கு அடக்கம் எடுப்போம்னு அம்மாகிட்ட சொல்லிரு… எல்லாரும் வந்திருங்க… நம்ம குடும்பத்தோட பெரிய சாவுய்யா… பேரன்மாரு, பேத்தி மாரு, பூட்டன் பூட்டி மாரு எல்லாரும் வந்துரனும் சரியா…”
“சரித்தே…” என நான் சொல்லி முடிக்கவும் எதிர்முனை அழைப்பை துண்டித்தது
“என்னங்க என்ன ஆச்சு யாரு இந்த நேரத்துல என்ன விஷயம்?” என ஆக்னஸ் பதறினாள்.
“ஏய்! கைத்தான் பப்பா… எறந்துட்டாராம்… காலையில ஊருக்கு போவனும்… மணி என்ன இப்போ?”
“ஐஞ்சே கால் ஆகுது…”
“காலையில விடிஞ்ச பெறவு அம்மாகிட்ட சொல்லிகிடலாம்… இப்பவே சொன்னா அழுது ஊரக் கூட்டிருவாக… புள்ளைகளுக்கு ஆட்டோகாரர்கிட்ட லீவு சொல்லி அனுப்பிடு… நாம ஒரு எட்டு எட்டரை மணிக்கு கெளம்பனும்… அத அனுசரிச்சு வேலைய வச்சிக்க”
“பப்பாவுக்கு… என்ன வயசிருக்கும்?”
“தொன்னூறு வயசுக்கு மேல இருக்கும்… சரி இப்ப படு!” என்றபடி நான் படுத்துக்கொண்டேன். ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. எனது நினைவுகள் கைத்தான் பப்பா குறித்து பயணிக்க துவங்கியது.
அந்தக்காலத்தில் பேர் போன தோணி தண்டலாய் இருந்தவர்.
என் அம்மாவிற்கு அப்பாவுடன் பிறந்த சித்தப்பா தான் கைத்தான் பப்பா… மிக ஏழ்மையான குடும்பத்தில் இரண்டு அண்ணன்களுக்கும் ஒரு அக்காளுக்கும் கடைசி தம்பியாக பிறந்தவர். எட்டு வயதில் கருவாட்டு கூடையை தூக்கிக் கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்ததில் துவங்கிய உழைப்பை தன் எழுபது வயதில் தன் மூத்த மகளின் எதிர்பாராத மரணத்துக்கு பின்பே வீட்டில் முடங்கினார். நல்ல ஆறடி உயரமும், விரிந்த தேகமும் கொண்ட ஆகிருதியான மனிதர். என்னை பொறுத்தவரை பப்பா என்றவுடன் நினைவுக்கு வருவது அவர் சொல்லும் கதைகள் தான்!
எனது குழந்தைப்பருவம் முழுவதும் பப்பாவின் கதைகளால் நிரம்பியது தான் என்றால் அது மிகையில்லை. நாம் கதை சொல்லும் பாட்டிகளைத் தான் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் எங்களைப் பொறுத்தவரை கதை சொல்லி பப்பா தான்! அவர் பொதுவாக உரையாடுவதே கதைகளைக் கொண்டு தான். அப்படி ஒரு இயல்பை கொண்டிருந்தார். இத்தனைக்கும் சொல்வார்களே மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது இல்லை என்று பப்பாவும் அப்படி தான்.
“பேரப்புள்ள பப்பாவுக்கு மூக்குப்பொடி வாங்கியாந்தியளா?” என்னை எதிர்கொள்ளும் போதெல்லாம் பப்பா கேட்கும் முதல் கேள்வி இதுதான். நானும் ஊருக்கு போகும் சமயங்களிலெல்லாம் நிச்சயமாக அவருக்கு மூக்குப்பொடி வாங்கிச் செல்வேன். எனக்கு பப்பாவின் மீது பிரியம் அதிகம். இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது… அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் உடற்கல்வி வகுப்பில் பள்ளி மைதானத்தில் நான் என் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருக்கும் போது என்னையும் எனது அக்காளையும் கைத்தான் பப்பா தான் வந்து பாதியில் வீட்டுக்கு அழைத்துப் போனார். வழக்கமாய் அந்தநேரத்தில் வேலைக்கு போயிருக்கும் அப்பா வீட்டின் நடுவே கிடத்தி வைக்கப்பட்டிருந்தார்.
“அப்பா ஏன் இங்க படுத்திருக்காங்க…” என நான் கேட்டபோது கைத்தான் பப்பா சொன்ன கதை “எய்யா… மேல சொர்க்கத்துல இயேசப்பாக்கு பேசிக்கொண்டு இருக்க நல்ல சேக்காளிமாறே இல்லையாம் உங்கப்பா தான் எந்நேரமும் நல்லா எல்லார்கிட்டையும் பேசிட்டு இருப்பாருல அதான் அங்க அவருக்கு பேச்சுத்துணைக்கு கூப்பிட்டு கிட்டார்” என அவர் சொல்லி முடிக்கவும்… “பப்பா… எங்கப்பாவை விட நீங்க நல்லா பேசுவீங்க தானே நீங்க இயேசப்பாகிட்ட போயிட்டு எங்கப்பாவ வரச் சொல்லுங்க…” என நான் அடம்பிடித்து அழுத போது அந்த மனிதன் வெடித்து அழுது என்னை அணைத்துக்கொண்டது இன்னமும் என் நினைவில் இருக்கிறது.
நினைவில் இருந்ததோ இல்லையோ பிற்காலத்தில் பப்பா பேச்சு வரும்போதெல்லாம் அடிக்கடி இதனை சொல்லிச் சொல்லி என் அம்மாவும் மற்றவர்களும் என் நினைவுகளில் பப்பா என்றவுடன் இச்சம்பவம் நினைவில் வரும்படி பதிந்து போகச் செய்துவிட்டார்கள்.
எனது தந்தையின் அகால மரணத்துக்கு பின் எங்கள் குடும்பத்துக்கே தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் இருந்து வழி நடத்தியவர் கைத்தான் பப்பா தான். அம்மா வயக்காட்டு வேலைக்கு ஆட்களை கவனிக்க செல்லும் போதெல்லாம் எங்களுக்கு பப்பா வீட்டில் தான் விளையாட்டு, சாப்பாடு, கதை எல்லாம். எப்போதும் ஏதாவது கதை சொல்லிக்கொண்டே இருப்பார். பிற்காலத்தில் நாங்கள் மேற்படிப்புக்காக பழையகாயலில் இருந்து தூத்துக்குடிக்கு குடியேறிய பின்னும் ஊரில் இருந்த எங்களது சொத்துக்களை பராமரித்து கொடுத்தது பப்பாவும், அவரது பிள்ளைகளும் தான். விடுமுறை என்றால் குடும்பத்தோடு பழையகாயலுக்கு சென்றிடுவோம். அப்போதும் விடிய விடிய பப்பாவின் கதைகள் தான்.
தான் தோணித் தண்டலாய் போன கதைகளை அத்தனை சுவாரஸ்யமாக விவரிப்பார். அதிலும் அவருக்கு வேலைப் பழகி கொடுத்த திபுர்சியான் தண்டலைப் பற்றிய கதைகள் என்றால் உற்சாகமாகிவிடுவார்.
“பேரப்புள்ள… அப்போ நாங்கெல்லா எளந்தாரிக… ஒரு மலையாள நடைக்கு போயிட்டு திரும்பி வந்திட்டு இருந்தமாக்கும்… காத்துன்னா காத்து பேக்காத்தா இருந்துச்சு… தோணி அலமாட்டமா கெடந்துச்சு… எங்களுக்குன்னா நல்ல பசிவேற கேட்டியறா… எங்க தண்டலுகிட்ட சொன்னமாக்கும்… மனுச தரையில நடக்குற மாறி சாதாரணமா வந்து அணியத்து பக்கமா நின்னுகிட்ட கையி ரெண்டையும் விரிச்சு என்னமோ மந்திரத்தை சொன்னாரு பாரு எங்கண்ணைய நம்ப முடியல… கடலு அவரு சொல்லுக்கு கட்டுப்பட்டு காத்தடி எல்லாம் நின்னுப்போச்சுன்னா பாத்துக்கோயன்… “வலைய எலக்குங்கலே…” என அவர் சத்தம் கொடுத்ததும் நாங்க வலைய போட்டோம் மக்கா செத்த நேரத்துல…”இழுவுங்கல அத…”ன்னு மறுபடியும் கத்துனார். கோட்டிக்கார மனுசன் என்னமோ சொல்றானேன்னும் இழுத்தா நம்பமாட்டீரு பேரப்புள்ள ஒத்த ஆளு இழுக்க முடியல…. நா(ன்)லா அப்போ நல்லா தாட்டியமா இருப்பேன் எனக்கே மூச்சு வாங்குது… ஒருவழியா இழுத்து போட்டா… ஓத்தாள வல முழுக்க மீனுவனா கேளும்… அப்புடி செழிக்க செழிக்க எப்பையும் தின்னதில்லன்னா பாத்துக்கோயேன்… கடல கெட்டுறதுன்னா அது எங்க தண்டல் தான்! திபுர்சியான் தண்டலுக்கிட்ட வேல கத்துகிட்டதுல இன்னைக்கு நாம் மட்டுந்தான் பொழச்சு கெடக்கன்…”
“பப்பா.. உங்களுக்கு கடலு கெட்ட தெரியுமா?”
“ஏ! அங்க இன்ன பேரப்புள்ளகிட்ட வா குடுத்துட்டு இருக்கீக… செத்த நாலு எட்டு போயி மவளுக்கு கறிக்கு வேணும்னா… அங்கன ரெண்டு முருங்கைகாய தட்டி எடுத்து கொடுத்திட்டு வந்தா என்ன?” என அம்மே அடுக்களையில் இருந்து கத்தினாள்.
“பேரப்புள்ள… கடல கெட்டுறதெல்லா பெருசு இல்ல… உங்க அம்மேக்காரி வாயக்கெட்ட வழி தெரியாமல்ல திரியுறேன் பப்பா…” என சொல்லியபடி அம்மேயின் குரலுக்கு கட்டுப்பட்டு கிளம்பி போனார்.
எனது பல இரவுகள் பப்பாவின் கதைகளால் நிரம்பியவை தான். அப்படி ஒரு இரவில் அவர் சொல்லி நிறுத்திய கதையொன்று இப்போதும் எனது நினைவில் விடையற்று உள்ளது. அதிலும் அந்தக் கதை குறித்து நான் அதற்கு பின்பும் பலமுறை பப்பாவிடம் கேட்டும் அவர் தன் ஒருக்களித்த சிரிப்பை தவிர வேறெதுவும் எனக்கு பதிலாக தந்ததில்லை. அந்தக் கதையை அவர் என்னிடம் சொன்ன அன்று பப்பா வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அதிகமாகவே வடிப்பு உட்கொண்டிருந்தார். அதனால் அதிக உற்சாகமாக அன்று காணப்பட்டார். அந்தக்காலங்களில் அவர் பழங்களைப் போட்டு வடிப்பு போடுவதில் வல்லவர். அன்றும் அப்படித்தான் ஆரம்பித்தார்…
“இந்த வெள்ளக்காரப் பய சாராயமெல்லா கொடலத்தான் கெடுக்கும்…. ஒடும்புக்கு புடிச்ச கேடு… ஆனா நாம பக்குவமா போடுற வடிப்புக்கு முன்னாடி அதெல்லா வருமா… கேட்டா அவன் செஞ்சா நல்ல சாராயமாம் நம்ம பாத்து பாத்து போட்டா அது கள்ளச் சாராயமாம். களவானிப் பயலுவ…”
நன்றாக சாய்வு நாற்காலியில் தன் உடலை சரித்து கொண்டவாரே தொடர்ந்தார்…”பேரப்புள்ள… அந்த நாளையில நான் வடிச்சத சாப்பிட்டா கெளவியும் முறுக்கேறி போயிருவான்னா பாத்துக்கோவும்… அதெல்லா ஒரு காலம்…” கொஞ்சம் ஏதேதோ நினைவுகளில் மூழ்கியவர் தன் இடுப்பில் இருந்து மூக்குப் பொடியை எடுத்து போட்டக்கொண்டார்.
“அந்தக்காலமெல்லா திரும்பி வராது… அவள மாறி அன்பக் காட்டவும் யாராலையும் முடியாது… என்னத்த கண்டாளோ எம்மேல அவளுக்கு அம்புட்டு பிரியம் உண்டு. நல்ல வரண்டு போன பாலவனத்துக்கு நடுவுல வத்தாத நீர் சோல இருக்குமாம்… அந்த கணக்கா வத்தாத பிரியத்துக்கு சொந்தக்காரி. அப்போ என் அண்ணமாருக்கும், அக்காளுக்கு கல்யாணமாகி அவுக அவுக குடும்பமா இருந்தாக. எங்க அம்மா அப்பாலாம் போய் சேர்ந்திருந்தாக… நான் ஒவ்வொரு ஒடம்பொறத்தா வீட்டுலயா தின்னுட்டு திரிஞ்ச காலம்.
அப்போ..தா எனக்கு அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டு போச்சு. அவ புருசன் ஒரு குடிகாரப் பய ராவும் பகலும் அவன் குடிச்சிட்டு விழுற எடந்தான் வீடும் உலகமும் அவனுக்கு. எனக்கும் அவ ஏந்தலா இருந்தா. பேரப்புள்ள நீரு பப்பாவ தப்பா நெனைக்காதையும்… என்னைய ஒரு பச்சப்புள்ளய பாத்துகிட்ட மாறி தான் அவ பாத்துகிட்டா… நானும் என் அம்மைய தான் அவகிட்ட தேடிக்கிடந்தேன். ஆனா ஊருக்கு அதெல்லா புரியல…”
“பேரப்புள்ள… ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ஒலகமுண்டு! அடுத்தவன் உலகத்த நமக்கு ஏத்துக்க முடியலங்கிறதால அத கேலி பேசுறதும் தூசித்து பேசுறதும் தப்பு… எனக்கு அதுவரைக்கும் தலவலிச்சுதா, வயிறுவலிச்சுதான்னு கவலப்படாத என் உடம்பெறத்தானுவ ஊரு பேசுதுன்னு உங்க அம்மைய கட்டி வச்சானுவ… உங்க அம்மைக்காரிக்கும் எல்லா தெரியும்… ஆனா ஒரு சாட காட்டிக்கிட்டதில்லயே. உங்க அம்மை வந்த பொறவும் நான் அங்க போக்கும் வரத்துமா தான் இருந்தே… ஆனா அவதான் என்னய கண்டிச்சா… இனி அவள பாக்க கூடாதுன்னு சொல்லி உங்க அம்மைகிட்ட என்னைய ஒப்படைச்சா… நான் தான் சொன்னம்லா எனக்கு அவ இன்னொரு தாயின்னு… மவராசி சரியா அன்னையில இருந்து ஒருவருசத்துக்குள்ள ஒரு கிறுஸ்மஸ் அன்னைக்கு போய் சேந்துட்டா…”
“ஒரு பூ மாறி வாழ்ந்து… உதுந்து போயிட்டா… ஆனா அவ விட்டுப் போன வாசம் மட்டும் இன்னமும் என்னய சுத்திக் கெடக்கு…” என சொல்லி மௌனமானார்.
“பப்பா… யாரு அவுங்க? நம்ம ஊர்ல எந்த தெரு? பேர் என்ன?”
“பேரப்புள்ள… ஏதோ எளக்கமா இருந்துச்சேன்னு ஒம்மகிட்ட சொன்னேன் அதுக்காக எல்லாத்தையும் சொல்லிர முடியுமா?”
“இப்படி ஒரு கத உங்களுக்கு இருக்குமுன்னு நா நெனச்சு கூட பாக்கல… சும்மா ஒரு க்ளூ குடுங்களேன்….” என பப்பாவை சீண்டினான்.
அவர் சிரித்துக் கொண்டே…”அவ ஒரு பூ! அவ உதிந்து போன இங்கலீஷ் மாசத்தோட மொத எழுத்து தான் அவப் பெயரோட மொத எழுத்தும்…”
“பப்பா… பேரக் கேட்டா விடுகதை சொன்னா… எப்படி?”
“முடிஞ்சுபோன கதைக்கு வெடை தேடுறது தேவயில்லாத வேல… இதுக்கு நான் பதில சொன்னா குருட்டுப் பூனை தவிட்டு மூட்டைய தட்டிவிட்ட கதையாகிப் போகும். நீர் போய் படும்” என சொல்லி சாய்ந்து கொண்டார்.
இப்படி பப்பாவின் நினைவுகளால் அலைகழித்து கிடந்தேன். இன்னமும் அக்கதைக்கான விடையை என்னால் கண்டடைய முடியவில்லை. வேறு யாரிடமும் அதுபற்றி கேட்பது சரியல்ல என்பதால் நான் பெரிதாக அதுகுறித்து துப்புதுலக்கவில்லை. எல்லா கதைகளுக்கும் ஒரு விடை இருக்கலாம் ஆனால் விடையற்ற கதைகள் தான் நம்மை விடாமல் பிடித்துக்கொள்ளும். என்னையும் அந்தக் கதை அப்படித்தான் பிடித்துக்கொண்டது. அவரது நினைவுகளிலும், அவர் சொன்ன கதைகளிலும் இருந்து விடுபட்டவனாய் ஒருவழியாய் எழுந்து என் அம்மாவிடம் பக்குவமாய் தகவலைச் சொல்லி அவளை ஆறுதல் படுத்தி பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு என் காரில் பழையகாயல் நோக்கி விரைந்தேன்.
கைத்தான் பப்பாவின் வீடு… பழைய நுரைக்கல் கட்டிடம்! ஆனால் சுவரெங்கும் டைல்ஸ் ஓட்டப்பட்டிருந்தது. தேக்கு மரத்தாலான தூண்களை கொண்ட நீளமான திண்ணை. அதன் முன்னால் பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். பப்பா அந்த பெரிய வரவேற்பரையின் நடுவில் நல்ல பட்டுச்சட்டையும், வேட்டியும் கட்டி கனத்த ரோஜாப்பூ மாலையுடன் குளிர்சாதனப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்தார். சுற்றி பெண்கள் அமர்ந்து இருந்து விசும்பிக் கொண்டிருந்தனர். பப்பாவின் தலைமாட்டில் ஒரு பெரிய குருஸும் அதன் இருபக்கங்களில் பெரிய மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தது.
நாங்கள் உள்ளே நுழைந்ததை கண்டவுடன் அம்மே பெருங்குரலெடுத்து… ”எய்யா என் ராசா யாரு வந்திருக்கான்னு பாருங்க… வாய்க்கு வாய் எம்மவ எம்மவன்னு சொல்வீங்களே அவள ஒருவாட்டி கண் தொறந்து பாருங்க என் ராசா… நம்ம பேரப்புள்ளைக… பூட்டன் பூட்டிக எல்லா பப்பாவ காண வந்திருக்குகளே… ஒருவாட்டி பாருங்க என் ராசா… இப்படி எங்கள தவியா தவிக்க விட்டுட்டு போயிட்டீங்களே… இனி நான் தனிமரமா… எப்படி கெடப்பேன்…. ஐயோ…” என அழுது கொண்டிருந்தவள் சட்டென சன்னமான குரலுக்கு மாறி “எய்யா… நீயும் பேத்தியாளும் சேந்து பப்பாவுக்கு அந்த மாலையைப் போடுங்க…” என்றாள்.
நாங்கள் கொண்டு போயிருந்த மாலையை போட்டவுடன்..”எய்யா அக்காளுக்கும் மச்சானுக்கு தாக்கல் சொல்லியாச்சா? கெடக்காதே அவளுக்கு பப்பான்னா ஓடியாந்துருவாளே…”
“அத்த தான் காலையில எனக்கு சொன்னாங்க அவுங்களே சொல்லியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்…” என நான் இழுத்தேன்.
“சித்தி அதெல்லா(ம்) சொல்லியாச்சு…ஞே! அவளும் அவ புருசனும் வந்திட்டு இருக்காங்க இவன்கிட்ட போய் இதெல்லாம் கேட்டிட்டு..” என பதிலளித்தாள் அம்மா! சற்று நேரத்தில் அவளும் இவர்களோடு சேர்ந்து அழத்துவங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாய் சனங்கள் வருவதும் துக்கம் கேட்டுவிட்டு அடக்கம் எப்போது என விசாரித்து செல்வதுமாய் இருந்தார்கள். அப்படி யாராவது ஆட்கள் உள்ளே செல்லும் போது மட்டும் பெண்கள் சொல்லி வைத்தாற்போல் அவரவர்க்கான நினைவுகளோடு கொஞ்சம் சத்தமாக ஒப்பாரி வைத்தார்கள்.
அவர்கள் அங்கிருந்து சென்றதும்…”ஏட்டி நா வரண்டு போய் கெடக்கு அந்த காபித்தண்ணிய கொஞ்சம் எடுத்து கொடுங்கட்டீ…” என வாங்கி தொண்டையை நனைத்துக்கொண்டார்கள்.
திடீரென உள்ளிருந்து ஏதாவது தகவல் சொல்லிவிடப்படும்…”எய்யா.. நம்ம அங்குச்சாமிக்கிட்ட ஞாபக படுத்தியாச்சா…? கோயில் பொறவாசல மூணுமணிக்கு மேல தொறந்து வைக்க சொல்லிருங்க… அப்புறம் அந்த பேண்டு செட்டுக்காரன நெனவு படுத்தியிருங்க… சரியா?”
வெளியே இருந்து அதற்கு நாங்கள் பதில் செல்வதற்குள் ஏதாவது செபத்தை முணுமுணுக்க துவங்கியிருப்பார்கள். அந்நேரம் யாராவது புதிதாய் உள்ளே வந்தால் ஆளைப் பொறுத்து சத்தமாய் அழுகைச் சத்தம் கேட்கும். அழுகை சத்தத்தின் அளவை கொண்டு… வந்தது நெருங்கிய சொந்தமா இல்லையா என்பதை யாராலும் எளிதில் கணித்து விட முடிவதாக இருந்தது.
சற்று நேரத்தில் அக்காவும் அக்கா மாப்பிள்ளையும் என் மருமகளோடு வந்தார்கள். அப்போது மீண்டும் அழுகைச் சத்தம் ஓங்கி ஒலித்தது…”யாத்தா! வந்து பாரு நம்ம பப்பாவ… பேத்தியா பேத்தியான்னு துடிச்சு போவாரே? பப்பாவப் பாரும்மா… எய்யா! ஏன் ராசா யாரு வந்திருக்கான்னு பாருங்கய்யா… உங்க அருமை பேத்தியாளும் பூட்டியும் வந்திருக்குதுவளே ஒருதடவ பாருமய்யா…” என அழுது கூட்டியவள்..சற்று குரலை தணித்து “ஏட்டீ இங்க அம்மே பக்கத்துல வந்து உக்காரு வா…” என என் அக்காளை அழைத்து இருத்திக்கொண்டாள். என் மருமகள் எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டது.
பாசத்தோடு என்னிடம் வந்தவள் “மாமா… எப்ப வந்தீங்க..? இனியாவையும், மகிழனையும் எங்க?” என அவள் விளையாடுவதற்கு என் பிள்ளைகளை தேடினாள்.
அவளது தலையை கோதியபடி…”அவுங்க வீட்டுக்கு பின்னால வெளையாண்டுட்டு இருக்காங்க நீயும் போ…” என அவளை அனுப்பிவிட்டு ”என்ன மச்சான்.. திடீருன்னு லீவு போட கஷ்டமாயிடுச்சோ…”
“அதெல்லாம் இல்ல மாப்ள… இதுக்கு வராம எப்படி? எல்லா உங்க அக்காதான் துக்க வீட்டுக்கு போறதுக்கும் அப்படி கெளம்புறாய்யா…”
“சரி… வேறென்ன?”
“நீருதான மாப்ள சொல்லனும்… என்ன மேம்படி எதுவும் உண்டா…?”
“நீங்க வேற மச்சான் இவளுக பத்து நிமிஷத்துக்கு ஒருதடவ வந்து மோப்பம் புடிச்சிட்டு போறாளுவ… இதுல எங்கிட்டு எந்திச்சு போவ…”
“அதுக்கு இப்படியே எவ்ளோ நேரோம் இருக்க? உம்மாமனுங்கள பாரு ஆளுக்கு ஒரு தூணப்பிடிச்சிட்டு உக்காந்திருக்கானுவ… வந்தவங்கள என்ன ஏதுன்னு கேக்க வேண்டாமா?”
“நல்லா சொன்னீங்க போங்க… வேற வெனையே வேண்டாம்… நாமளாச்சும் போனமா வந்தமான்னு இருப்போம்… இதுல கூட்டு சேந்தா அவ்ளோதான்…” என நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே என் அக்காளும் எனது மனைவி ஆக்னஸும் உள்ளிருந்து வெளியே வந்தார்கள்.
“எப்பா… முடியலப்பா இந்த அம்மே இருக்கே அழுவுறங்குற பேருல அது சொல்றதெல்லாங் கேட்டா சிரிச்சு தொலைச்சிருவமோன்னு பயமா இருக்கு… யாரு உள்ள வந்தாலும் ஏதோ பப்பா தூங்கிட்டு இருக்குற மாறி ’கண்ணதொறந்து பாருங்கய்யா…ன்னு’ சொல்லிட்டு கெடக்காக சரி அதாவது பரவாயில்லன்னா… இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால…’ஏன்! ராசா படுக்கையில உளுந்தாலும் ஒரு செரமமும் எனக்கு நீங்க வைக்கயிலயே… ஆடு புளுக்க போடுற மாதிரில போடுவீக…ன்னு’ கொஞ்சம் கூட ஒரு இதே இல்லாம சொல்லி அழுவுறாக…” என சொல்லிவிட்டு சிரித்தாள்.
அவளோடு அக்காளும் சேர்ந்து கொண்டாள். “நடு வீட்ல பப்பாவை வச்சுக்கிட்டு காப்பித்தண்ணிய குடி… பழத்த திண்ணுன்னு ஒரே விருந்தோம்பல் வேற…”
அப்போது வெளியே வந்த அம்மா ஜெனிட்டா…”ஏய்! புள்ளையளா… இங்க வந்து நின்னு என்ன கத அடிச்சிட்டு நிக்கிறீங்க… கொஞ்சமாவது இருக்கா உங்களுக்கு..?”
“எம்மா! நீ சும்மா இரு… அம்மே அடிக்கிற கூத்தப்பாத்தா யாருக்கும் சிரிப்பு தான் வரும்… நீ எப்படித்தான் அவுக கூட சேந்து அழுது வடியிறியோ?”
“உங்களுக்கெல்லா(ம்) பப்பா மேல ஒரு பாசமே கெடையாதாயே? ஒரு மனுசி அழுதுக்கிட்டே இருக்க முடியுமா? அதான் தன்னோட ஆத்தாமைய அவுக அப்படி தனிச்சுகிடுறாக அது உங்களுக்கு கேலியா போச்சு இல்ல? அதுமட்டும் இல்ல புள்ளயளா எறந்தது பப்பான்னாலும் அழுவுற எல்லாரும் அவுக அவுக துக்கத்தை நெனைச்சு தான் ஆத்திக்கிடுதோம்… மனசு விட்டு அழுவுறதுங்கிறது ஒரு ஆறுதல் தானத்தா… எனக்கெல்லாம் நீங்க சின்னஞ் சிறுசுகளா இருக்கும்போது திடுதிப்புன்னு உங்கப்பாவை இப்படி கொண்டாந்து கெடத்துனது தான் ஞாபகத்துக்கு வருது… அதுக்கு பொறவு நாம்பட்ட பாடு தெரியுமா உங்களுக்கு? அப்பயெல்லா(ம்) இந்த மனுசன் தானே நமக்கு எல்லாமா நின்னாரு… என்ன பெத்தவரு செய்ய வேண்டியத அந்த எடுத்துல இருந்து பாத்துக்கிட்டது பப்பா தான… அதை எப்படி நா மறப்பேன்…” என சொல்லி மீண்டும் விசும்பினாள்.
ஒருசில நொடிகளில் தன்னைத் தானே தேற்றிக்கொண்டவள்…”சரி வாங்க புள்ளையளா.. உள்ள மறுபடியும் செவத்த ஆரம்பிக்க போறாங்க” என சொல்லி அக்காளையும் ஆக்னஸையும் மீண்டும் உள்ளே அழைத்து சென்றாள்.
வெளியில் அமர்ந்திருப்பவர்கள் பப்பாவைப் பற்றிய தங்கள் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு இருந்தார்கள். அவ்வபோது ஆட்கள் வருவதும் ஆங்காங்கே அமர்ந்து பேசுவதுமாய் இருந்தார்கள். உள்ளே தொடர்ந்து பெண்கள் ஜெபித்துக்கொண்டும் அவ்வப்போது அழுகுரல் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஆண்களில் சிலர் அவரவர்க்கான நபர்களோடு சென்று குடித்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டனர். இடையில் நானும் என் அக்கா மாப்பிள்ளையுடன் சென்று ஆளுக்கு ரெண்டு பீர் குடித்துவிட்டு வந்தோம். பிள்ளைகள் தம் வயதொத்தவர்களுடன் வீட்டைச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஒருவழியாய் மணி மூணு ஆகியவுடன் பங்குத்தந்தைக்கு தகவல் சொல்லிவிடப் பட்டு அவரும் வந்து சேர்ந்தார். நடுக்கூடத்தில் இருந்த பப்பாவை குளிர்சாதனப்பெட்டியில் இருந்து எடுத்து வீட்டு முற்றத்தில் போடப்பட்டு இருந்த பெஞ்சின் மீது அலங்கரிக்கப்பட்ட மரத்தாலான மையப்பெட்டிக்குள் வைத்து கிடத்தினர். பெண்கள் கூட்டம் அவரை சுற்றி நின்று பெருங்குரலெடுத்து அழத்துவங்கியது. சில நிமிடங்களில் அவர்களை அமைதிப்படுத்தி விட்டு பங்குச்சாமியார் செபம் செய்யத்துவங்கினார். அது முடிந்தவுடன் பப்பாவை தூக்கிக்கொண்டு கோயிலுக்கு செல்லும் முன் உறவுகள் கூடி அம்மேக்கு கச்சைப் போட்டார்கள். கச்சை என்பது ஆடைகள். இனி பப்பாவுக்கு பின் அவள் உடுத்த வேண்டிய ஆடைகளை ஊரும் உறவும் கூடிக்கொடுத்தது. அது ஒரு பெரும் துயரம்! அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான தாம்பத்திய பெருவாழ்வை இணைந்து நடத்திய பெருமக்களுக்குக் கூட அந்த சடங்கின் மூலம் பெரும் வலியை இழப்பின் துயரத்தை அது கொடுக்கும்… கொடுத்தது.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியில் பங்கெடுத்தவனின் இறுதி பயணத்தில் பங்கேற்க அம்மைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதுவரை சூழ்ந்த இழப்பின் பாரம் மேலும் அவளை இறுக்கியது. அவள் முன்னிலும் அதிகமாக பெருங்குரலெடுத்து இப்போது அழத்துவங்கியிருந்தாள்… அவளது கண்ணீரைத் துடைக்கும் கரங்கள் இறுக்க கட்டப்பட்டு இருந்தது!
அவருக்காக தோண்டப்பட்ட குழியில் பெட்டியோடு இறக்கப்பட்டார். அவரது இறுதி காரியங்கள் நிறைவேறிற்று. அவரது குழி மூடப்பட்டு மண்குவியலாய் குவிக்கப்பட்டது.
“இன்னையில இருந்து மூணாம் நாளு துக்கம் களையிறாங்களாம்… எல்லாரும் வீட்டுக்போயிட்டு போவனுமாம்… புள்ளையளும், பேரப்புள்ளையளும், சொக்கார மாரும் கேட்டுக்கிட்டாவ…. ஐயா மாரு சுருட்டும் வெத்தலையும் எடுத்துக்கோங்க…” என இறுதி அறிவிப்பை வெட்டியான் கொடுத்தார்.
மெல்லமெல்ல ஒவ்வொருவராய் களைந்து செல்ல துவங்கினர். நான் அவரது கல்லறையின் தலைப்பக்கமாக நின்றுபடி மண்மூடி குவிக்கப்பட்ட குழியின் மீது மாலைகளை அடுக்கி மலர்களை தூவி வைத்தேன். எல்லாவற்றையும் முடித்துவிட்டு நான் கிளம்ப எத்தனித்தபோது எதேச்சையாக பப்பாவின் குழிக்கு தலைப்பக்கமாக நடப்பட்டிருந்த குருசை கவனித்தேன்… அதில் பெயர் டெய்சி என்றும் இறந்த தேதி 25.12.1955 என்றும் இருந்தது.
அந்த கணத்தை இப்போது நினைத்தாலும்… உடலெல்லாம் புல்லரித்தது! பப்பா வழமையாக மூக்குப்பொடியை தன் நாசிக்குள் திணித்துக்கொண்டு அதிர்ந்து ஒருவகை சிலாகிப்போடு தும்மும் சத்தம் அப்போது எனக்குள் கேட்டது… என்னையும் அறியாமல் மீண்டும் பப்பாவின் குழியை மீண்டும் பார்த்தேன்…. சிறிய புன்னகையுடன்!
– அண்டோ கால்பட்.