காபூல் விமான நிலைய வெடிகுண்டு விபத்து: பலி எண்ணிக்கை 175 ஆக உயர்வு..!
காபூல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியில் இருந்து அங்கிருந்து விலகி வருகிறது. இதனால், தற்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலரும் குவிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது வரை 175 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க வீரர்கள் ஆவர். மற்றவர்கள் ஆப்கானிஸ்தான், பிரிட்டன் ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.