அதிபர் டிரம்ப்க்கு பதிலடி கொடுத்த ஜஸ்டின் ட்ரூடோ..!
கனடாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, தாங்களும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிதிக்க உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார்.
கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரி விலக்கு சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு ஏற்க முடியாத ஒன்று என்றும், தங்களது தொழிலாளர்கள் மீது தங்களுக்கும் அக்கறை இருப்பதாக கூறியுள்ள ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.