பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனம் ..!
பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நீதிபதி ஆயிஷா மாலிக் நியமனத்துக்கு பாகிஸ்தான் பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நீதிபதி ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் பார் கவுன்சில் மிரட்டல் விடுத்தது. நீதிபதி ஆயிஷா நியமனத்தை எதிர்ப்பவர்கள் கூறுகையில், சீனியாரிட்டி புறக்கணிக்கப்பட்டு ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதாகக் கூறுகின்றனர்.
உயர்நீதிமன்றத்தில் பரவாயில்லை, உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படக் கூடாது என்றும் சிலர் கூறி வந்தனர். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு முறை நியமிக்க முடிவு செய்தார். ஆனால் எதிர்ப்பு காரணமாக தள்ளிப்போனது. நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆதரவாக 4 பேர், எதிராக 4 பேரும் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையில், நீதிபதி குல்சார் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைமை நீதிபதிதான் இது குறித்து முடிவெடுப்பார் என எதிர்ப்பாளர்கள் கூறினார். நீதிபதி ஆயிஷா, சீனியாரிட்டியில் நான்காவது இடத்தில் உள்ளதால், அவரை உச்சநீதிமன்றத்துக்கு முதலில் அனுப்புவது தவறு என்று பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது.
இந்நிலையில், நீதிபதி ஆயிஷாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து இன்று நடைபெற்ற பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த பாகிஸ்தான் நீதித்துறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டத்தில் ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்த 5 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
தற்போது பாகிஸ்தானின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆயிஷா மாலிக் பதவியேற்க உள்ளார். நீதிபதி ஆயிஷா தற்போது லாகூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார்.
நீதிபதி ஆயிஷா நியமனம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.