தலீபான்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானில் நடைபெற்றால் அதை ஜோ பைடன் ஏற்றுக்கொள்ள மாட்டார் – வெள்ளை மாளிகை!
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி செய்தால் அதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் நாட்டிற்கும் இடையேயான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது தலிபான் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அண்மையில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலீபான்களுக்கு இடையேயான அமைதி பேச்சு வார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி அவர்கள் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமைதியை உறுதி செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை பரிசீலிக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி செய்தால் அதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.