தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசு தொடர்ந்த வழக்கு.!
தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தீபாவிற்கு தடை விதிக்க உரிமை இல்லை என்று ஏ.எல்.விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் , எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர் . இதே போல் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து கௌதம் மேனன் குயின் என்ற வெப் தொடரை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ள தீபா ,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கும் தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது .
அதில் இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் விஷ்ணுவர்தன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு குறித்து கூறியதாவது, ‘தலைவி’ என்ற புத்தகத்தை தழுவியே தலைவி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.எனவே அதற்கான ஒப்புதலை தீபாவிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர் பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் ஜெயலிதாவை நல்ல முறையில் மட்டுமே காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார் .மேலும் எதிர்கால தலைமுறையினர் ஜெயலலிதாவை நன்கு தெரிந்து கொள்ளும் வகையிலே எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் .
எனவே இந்த படத்திற்கு தடை கோர தீபாவுக்கு முடியாது என்றும்,அதற்கான உரிமையும் அவருக்கு இல்லை என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அதன் பின் தீபா தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் வாதிட்ட போது ,தலைவி படத்தினை திரையில் ரிலீஸ் செய்வதற்கு முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இதற்கு இயக்குனர் விஜய் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், படத்தினை தணிக்கை குழு பார்த்து விட்டு தணிக்கை செய்யும் என்று தெரிவித்துள்ளார் .அதன் பின் இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட பின் வழக்கின் விசாரணையை தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.