இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா இளம்பெண்.!
- 69-வது ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவை சேர்ந்த இளம்பெண் டோனி-ஆன் சிங் வென்றுள்ளார்.
- பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.
69-வது உலக அழகி போட்டி லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் 20-ம் தேதி துவங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளுக்கு பின் 40 பேரை தேர்வு செய்யப்பட்டது. பின்னர் உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று இரவு நடந்தது. இதில், ஜமைக்காவின் டோனி-ஆன் சிங், பிரான்ஸ் நாட்டின் ஓப்லி மெஸினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகியோர் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், இறுதிச்சுற்றில் அவர்களின் அறிவுத்திறனுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், ஜமைக்கா அழகி டோனி ஆன்சிங் சிறப்பான பதில்களைக் கூறி வெற்றி பெற்று, உலக அழகி பட்டத்தையும் கைப்பற்றினார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனிசா பொன்சி டி லியான் மகுடம் சூட்டினார். அதை தொடர்ந்து பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.
உலக அழகி பட்டம் வென்ற டோனி-ஆன் சிங்கிற்கு 23 வயதாகிறது. அவர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலையில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரிடம் உலகில் அவருக்கு மிகவும் முக்கியமானது என்பது என்ற கேள்விக்கு, தனது தாய் என புத்திசாலித்தனமாக விடை அளித்தார். பின்னர் 3-வது இடம் பிடித்த இந்திய அழகி சுமன் ராவ், ராஜஸ்தானை சேர்ந்தவர். இதற்கு முன் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.