தோல்விகளையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய ஜாக் மா -வின் வாழ்க்கை வரலாறு
- ஜாக் மாவின் சறுக்கல்கள், சவால்கள் பல வெற்றி படிக்கட்டுகளை உருவாக்கி, தனக்கான பாதையை தானே அமைத்த ஆன்லைன் ராஜா.
- இன்றுள்ள தொழிலதிபர்களுக்கு உதாரணமாக விளங்கும் ஜாக் மாவின் அற்புதமான வாழ்க்கை வரலாறு.
ஜாக் மா குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக செப்டம்பர் 10, 1964-ம் ஆண்டு சீனாவின் செஜியாங் நகரில் பிறந்தார். இவரை ஜாக் மா அல்லது மா யூன் என்று அழைப்பார்கள். இவருக்கு, ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம்.
படிக்க தெரியாதவன் என்று புறக்கணிக்கப்பட்ட ஜாக் மாவின் பள்ளிபருவம்
மிகப்பெரிய சாம்ராஜ்யமான சீன பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், தனி மனிதனாக நின்று, பல சவால்களை சந்தித்து வாழ்க்கையில் வெற்றி கண்ட ஜாக் மா-வின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்ப்போம்.
ஜாக் மாவிற்கு சிறு வயதில் இருந்தே தனது திறன்களை வளர்த்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், இளம் வயதிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா, 1972-ல் அவரது ஊரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வர, வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார்.
கல்லூரி பருவத்தில் காலை வாறிய கணிதம்
ஜாக் மா தனது பள்ளி பருவத்தில் ஒரு சிறந்த மாணவராக இருக்கவில்லை. இவர் ஆரம்பப் பள்ளி தேர்வில் 2 முறை தோல்வியடைந்தவர். நடுநிலை பள்ளி தேர்வில் 3 முறை தோல்வி அடைந்தவர். கல்லூரி நுழைவு தேர்வில் 2 முறை தோல்வி அடைந்தவர்.
கல்லூரி நுழைவு தேர்வில் கணிதத்தில் 120 மதிப்பெண்ணுக்கு 1 மதிப்பெண் மட்டுமே பெற்றார். அனைத்திலும் தோல்வி அடைந்த பின்பும் விடாமுயற்சி என்ற போர்வாளை தன் கையில் ஏந்தியவராய், வாய்ப்புகளை தேடி செல்ல தொடங்கினார்.
ஜாக் மாவின் வாழ்க்கையை நிலைநிறுத்திய நிராகரிப்புகள்
மிகப்பெரிய தொழிநுட்ப நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா இளமைப்பருவத்தில் கணினி என்ற வார்த்தையை கூட கேட்காதவர். இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழத்தால், 10 முறை நிராகரிக்கப்பட்டவர். இந்த நிராகரிப்பு, மேலும், வெற்றிப்படிகளை நோக்கி செல்ல தான் பாதைகளை உருவாக்கியது.
இந்நிலையில் 1980-ம் ஆண்டில், அங்சூ நார்மல் என்ற பல்கலை கழகத்தில் பயின்று அவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். இதன்பின், இவர் 30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து அனைத்திலும் தோல்வியை மட்டுமே தழுவினார். இந்த தோல்வி அவரது வாழ்க்கையில், சிறிதளவு கூட பின்னடைவை கொண்டு வரவில்லை.
இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட
இதனையடுத்து, இவர் ஒருமுறை போலீஸ் அதிகாரி வேலைகளுக்கு அணுகினார். ” நீங்கள் சிறந்தவர் இல்லை ” என அதிலும் புறக்கணிக்கப்பட்டார் ஜாக் மா. பின் kfc-ல் பணிபுரிவதற்கு விண்ணப்பித்தார். அவரோடு, மொத்தம் 24 பேர் இதற்கு விண்ணப்பித்தனர். ஆனால், 24 பேரில் இவர் மட்டுமே புறக்கணிக்கப்பட்டார்.
இருந்தாலும், அவரது தன்னம்பிக்கையும், உறுதியும் ஒருபோதும் குறையவில்லை. இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட புறக்கணிப்புகள் இவரை வெற்றி படிகளில் தான் ஏற்றி விட்டது. 1995-ம் ஆண்டு மொழிபெயர்ப்பாளராக அறிமுகமானார்.
ஜாக் மாவின் வாழ்க்கையில் இன்ப வாசலை திறந்த இணையம்
அதன்பின் ஜாக் இணையத்தை பற்றி அறிந்த பிறகு, china page என்ற சீனாவின் முதல் ஆன்லைன் telephone directory-ஐ தொடங்கினார். இதன் மூலம் பல இடங்களில் இருந்து பார்ட்னர்ஷிப்பிற்கான இ – மெயில்கள் பல இடங்களில் இருந்து வந்தது. இது அவரது வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியாக அமைந்தது. பின் நிதி பற்றாக்குறையின் காரணமாக இதனையும் கைவிட்டார்.
இதனையடுத்து, 1998-ம் ஆண்டில், ஜாக் மா பொருள் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர்களை இணைக்கும் அலிபாபா என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதிலும் அவர் பல தோல்விகளை தழுவினார். தொழில் தொடங்கி 3 ஆண்டுகள் வரையிலும் இந்த நிறுவனத்தால் அவருக்கு எந்த லாபமும் இல்லை.
இது லாபம் இல்லாத தொழில்
ஜாக் மா அலிபாபாவிற்கு முதலீட்டை பெற அமெரிக்காவின் தொழிநுட்ப மையமான சிலிக்கான் வெளி முதலீட்டாளர்களிடம் அணுகிய போது, இது இலாபம் இல்லாத தொழில் மாதிரி என்று கூறப்பட்டு முதலீட்டை பெறுவதற்கு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், அலிபாபா நிறுவனத்துடன் சேர்த்து சேவை செய்ய எந்த வங்கிகளும் விரும்பவில்லை. இருப்பினும் GOLDMAN SACHS, SOFTBANKஆகிய இரண்டு நிறுவனங்களும் மாவிற்கு நிதியுதவி வழங்கினர். அதன் பல நிறுவனங்களை தனது வெற்றியால் பின்னுக்கு தள்ளி, வெற்றியை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச நிறுவனமான EBAY நிறுவனத்தையே தனது வெற்றியால் வெளியேற்றியவர்.
இது முட்டாள்தனமானது
இதனையடுத்து, ஜாக் மா Alipay என்ற சொந்த பண பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். இவர் இந்த பண பரிவர்த்தனை இணையத்தை தொடங்கிய போது,பலரும் இது முட்டாள்தனமானது என்று கூறினார்கள். ஆனால், இன்று உலகமுழுவதும் அதிகமான ஆன்லைன் பண பரிவர்த்தனை ALIPAY மூலமாகவே நடைபெறுகிறது.
ஆனால் பல சவால்களை சந்தித்து, பல தோல்வியையே சந்தித்து வந்த ஜாக் மாவின் வாழ்க்கையில், தோல்வியை தேடி பார்த்தாலும் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பல சாதனைகளை படைத்து, இன்று ஆன்லைன் ராஜாவாக வளம் வருகிறார் ஜாக் மா. இவரது வாழ்க்கை வரலாறு, பல தொழில் அதிபர்களின் வாழ்க்கைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.