இந்தியாவில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை கைப்பற்ற டாட்டா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை..!
ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத், தமிழ்நாடு யூனிட்களை வாங்க டாட்டா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம், அமெரிக்க கார் நிறுவனமான போர்டு இந்தியாவில் கார்களை தயாரிப்பதை நிறுத்தி,குஜராத் மற்றும் தமிழகத்தில் உள்ள தனது இரண்டு ஆலைகளையும் மூடுவதாக அறிவித்திருந்தது.இதனால்,ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால்,சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடி வருகிறது.
அந்த வகையில்,டாட்டா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இரண்டு வார இடைவெளியில் டாட்டா குழும நிர்வாகிகள் முதல்வரை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக செப்டம்பர் 27 அன்று டாட்டா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரீஷ் வாக் ஸ்டாலினை சந்தித்தார்.
இந்நிலையில்,உள்நாட்டு ஆட்டோ நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள ஃபோர்டின் அலகுகளை வாங்க ஆரம்ப பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் – ஃபோர்டு ஒப்பந்தம் ஏற்பட்டால், அமெரிக்க வாகன உற்பத்தியாளரிடமிருந்து வாங்கும் இரண்டாவது சொத்து ஆகும்.ஏனெனில், இதற்கு முன்னதாக மார்ச் 2008 இல், டாட்டா குழு ஜாகுவார் லேண்ட் ரோவரை ஃபோர்டில் இருந்து 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
ஃபோர்டு தனது நஷ்டத்தில் இருக்கும் இந்திய யூனிட்டை கைவிட்டு, மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களில் முதலீடுகளை அதிகரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.