ஒமைக்ரான் அச்சுறுத்தல் – உலகம் முழுவதும் 4,000 விமானங்கள் ரத்து!
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் 4,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி பலரும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில்,உலகெங்கிலும் உள்ள வணிக விமான நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் வார இறுதியில் 4000 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில்,வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா நோய்த்தொற்றின் பெருகி வரும் தீவிர அலையானது,தற்போது விடுமுறை பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் அச்சத்தையும்,துயரத்தையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக,ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில்,உலகம் முழுவதும் 4 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,விடுமுறை பயணம் மேற்கொள்ள இருந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமானக் கண்காணிப்பு இணையதளமான https://uk.flightaware.com/ இல் இயங்கும் கணக்கின்படி,உலகளவில் நேற்று (வெள்ளிக்கிழமையன்று) குறைந்தபட்சம் 2,366 விமானங்களை ஏர்லைன் கேரியர்கள் ரத்து செய்துள்ளன என்றும்,மேலும் 9,000 விமானங்கள் தாமதமாக வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 1,616 கிறிஸ்துமஸ் தின விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும்,மேலும் 365 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்ய திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரயிறுதியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களில் அதிகமானவை அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் வெளியேயும் வணிக ரீதியான விமானப் போக்குவரத்து என்று FlightAware தரவு கூறுகிறது. அதன்படி,அமெரிக்காவிற்குள், உள்ளே அல்லது வெளியே மொத்தம் 683 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.