தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண் சவுமியா குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் பேச்சு…!
தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் பலியான கேரள பெண் சவுமியாவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக,அவரது குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் நேற்று பேசியுள்ளார்.
ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை தடை விதித்தது.இதன்காரணமாக,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து,பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு மத்தியில்,ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.அதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்,இஸ்ரேல்-ஹமாஸ் போராளிக்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.அப்போது,ஹமாஸ் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் சவுமியா என்பவர் உயிரிழந்தார்.அவர்,கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுமியா கடந்த 7 ஆண்டாக இஸ்ரேலில் ஒரு வயதான பெண்ணை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.அவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.இரண்டு ஆண்டுக்கு முன் கேரளா வந்து சென்ற சவுமியா,இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.இதனையடுத்து,அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின்னர் அங்கிருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில்,இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின்,நேற்று மாலை இடுக்கியில் உள்ள சவுமியா குடும்பத்தினரக்கு ஆறுதல் கூறுவதற்காக 20 நிமிடம் பேசியுள்ளார்.எனினும்,இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் அவர்களுடன் நடத்திய உரையாடலின் விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால், அதிபர் ருவன் ரிவ்லின் ஆலோசகர்,சவுமியா குடும்பத்தினருடன் அதிபர் பேசியதை உறுதிப்படுத்தினார்.
இதற்கு முன்னதாக,இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டாக்டர் ரான் மல்காவும், சவுமியா குடும்பத்தினருடன் ஆறுதல் கூறுவதற்காக கடந்த வாரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.