இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்..!காசாவில் 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு- ஐ.நா தகவல்..!
இஸ்ரேல்-பாலஸ்தீனாவுக்கு இடையேயான மோதலில்,காசாவில் உள்ள 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வருகிறது.அதில்,ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய குழுக்கள் காசாவிலிருந்து சுமார் 3,350 ராக்கெட்டுகளை வீசியதாகவும்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 130 ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் கொல்லப்பட்டதாகவும்,மேலும்,ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 15 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை தகர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மனித உரிமை ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (ஓஹெச்சிஏ) தெரிவித்துள்ளது.
மேலும்,இதுகுறித்து ஓஹெச்சிஏ அதிகாரிகளில் ஒருவரான ஜென்ஸ் லர்கே கூறியதாவது,”காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இதுவரை 61 குழந்தைகள் உட்பட 200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும்,47,000 பேர் காசாவில் ஐ.நா. நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் கோரி இடம்பெயர்ந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல்,இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 132 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.மேலும்,316 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.அதில் ஆறு மருத்துவமனைகள் மற்றும் ஒன்பது ஆரம்ப சுகாதார நிலையங்களும் அடங்கும்”,என்று கூறினார்.
இதற்கிடையில்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையிலான சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 57 நாடுகளின் அரசியல் முயற்சிகள் குறித்து காணொளி வாயிலாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில்,இஸ்ரேல்-பாலஸ்தீன அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.