யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்… ஹமாஸ் எச்சரிக்கை.! இஸ்ரேல் தாக்குதல்.!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தி இரு தரப்பு போரை ஆரம்பித்தனர். அந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்தனர் . அதன் பிறகு இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடர்ந்தது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை காசா நகரில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், கத்தார் , அமெரிக்கா, எகிப்து நாட்டின் மத்தியஸ்தலத்தை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டு இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
‘இது ஹமாஸின் முடிவின் ஆரம்பம்’ – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை..!
இதில், 80 இஸ்ரேலிய பணயக்கைதிகள் 240 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். காஸாவில் இன்னும் 137 பணயக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது, அதே நேரத்தில் சுமார் 7,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நிறுத்தம் முடிந்த உடனேயே மீண்டும் இஸ்ரேல் ராணுவம்ட் தாக்குதலை தொடர்ந்தது. ஹமாஸ் அமைப்பு நேற்று ( ஞாயிற்றுக்கிழமை), ” இஸ்ரேல் தங்கள் கைதிகளை விடுவிக்க, பிணை கைதிகள் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால் இஸ்ரேல் பிணை கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று எச்சரித்தது.
இதனை தொடர்ந்தும் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் இராணுவ தகவல் தொடர்பு தளம், தெற்கு காசாவில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் காசா நகரில் ஷேஜாயாவில் உள்ள ஹமாஸ் இராணுவ கட்டளை மையம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியது.
காசாவின் 2.4 மில்லியன் மக்களில் 1.9 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் . அவர்களில் பாதி பேர் குழந்தைகள். காஸாவின் 36 மருத்துவமனைகளில் 14 மருத்துவமனைகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.
பிணை கைதிகளை மீண்டும் விடுவிக்க போர் நிறுத்ததை மீண்டும் செயல்படுத்த கத்தார் அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை குறைத்து உள்ளது என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், போர் நிறுத்தம் வேண்டாம் என கூறினார். ஹமாஸ் இன்னும் உயிருடன் இருப்பதால் தான் நிலைமை இன்னும் அப்படியே உள்ளது என்று அவர் கூறினார்.