பிரபல தமிழ் நடிகரின் வீட்டில் ஒட்டப்பட்ட தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்.!
ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4வது கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் அறிவித்திருந்தார். சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்யவும், கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லையென்றாலும் அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ராதாரவி நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் உள்ள சொந்த வீட்டில் தனது 8 உறவினர்களுடன் கடந்த 10ம் தேதி வந்துள்ளார். உடனே அந்த பகுதி மக்கள் கோத்தாகிரி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்த நிலையில், ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் அவர்கள் யாவரையும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதோடு, ராதாரவியின் வீட்டின் முன்பு தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளனர். இதனால் கோத்தாகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.