பிரெட் கட்லட் இவ்வளவு சுலபமா? அருமையான ஈவ்னிங் ஸ்னாக் இப்படி செஞ்சி பாருங்க..!
தேவையான பொருட்கள்: பிரெட் துண்டு – 7, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மஞ்சள்தூள்–அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், வர மிளகாய்தூள் – அரை ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கேரட் – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை நன்கு பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் வைத்து உள்ள பிரட் தூளுடன் இந்த பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கலந்து விட வேண்டும். இதன் பிறகு கேரட்டை துருவி அதையும் இந்த கலவையுடன் சேர்க்க வேண்டும். இதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிசைந்து வைத்துள்ள இந்த கலவையில் இருந்து சிறு சிறு உருண்டையாக எடுத்து வட்ட வடிவில் கட்லட் போன்று செய்து கொள்ள வேண்டும். தோசைக் கல்லின் மீது அந்த கட்லட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக ஆன பின்பு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் இந்த எளிமையான பிரட் கட்லட். வீட்டில் குழந்தைகள் இருந்தால் மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் போதும். அவர்கள் விருப்பமாக சாப்பிட இந்த கட்லட் போதும். இதற்கு சைடு டிஷ் ஆக தக்காளி சாஸ் சேர்த்து கொள்ளலாம்.